ஆலந்தூர்:
சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தை சேர்ந்தவர் மோசஸ் (வயது 22). தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்,
நங்கநல்லூரில் வேலை முடிந்து மயிலாப்பூருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்றார். இந்த நிலையில், அவர் ஆலந்தூர் கத்திப்பாரா மேம்பால
சர்வீஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, பெருங்குடி நோக்கி சென்ற தண்ணீர் லாரி ஒன்று, இவர் மோதியதில் தலை நசுங்கி பரிதாபமாக
பலியானார்.
அதேபோல் ராமாபுரத்தில் உள்ள மருந்தகம் நிறுவனத்தில் தங்கி இருந்து பணிபுரிந்து வந்த நாமக்கல் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (40),
தர்மபுரியை சேர்ந்த திவாகர்(22) ஆகியோர் நேற்று அதிகாலை ஒரே மோட்டார் சைக்கிளில் நந்தம்பாக்கம் மவுண்ட் சாலையில் சென்றனர்.
அப்போது கிண்டி நோக்கி சென்ற கூரியர் வேன் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் நிலைத்தடுமாறி மோட்டார்
சைக்கிளில் இருந்து தவறி விழுந்தனர்.
அப்போது சுப்பிரமணியன் மீது வேன் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, காயங்களுடன் கிடந்த திவாகர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த 2 விபத்துகள் குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.