லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மற்றும் புல்புர் மக்களவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க.வை சமாஜ்வாதி கட்சி வீழ்த்தி வெற்றி பெற்றது. முக்கியமாக யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூரில் பெற்றுள்ள வெற்றி அக்கட்சியினருக்கு பெரிய உற்சாகத்தை அடுத்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு அளித்ததால் இந்த வெற்றி சாத்தியமானதாக கூறப்படுகிறது. வெற்றிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், வெற்றிக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிக்கு நன்றியை தெரிவித்தார்.
“இரு தொகுதிகளும் முதல்வர் மற்றும் துணை முதல்வருடையது. இரு தொகுதியில் மட்டுமே மக்கள் கோபம் இவ்வளவு இருக்கும் நிலையில் பிற பகுதியில் எப்படி இருக்கும் என பார்த்துக்கொள்ளுங்கள். பா.ஜ.க. விற்கு பொதுமக்கள் சரியான பதிலடியை கொடுத்து உள்ளார்” என அகிலேஷ் தெரிவித்தார்.
மேலும், “உத்தரபிரதேச மாநில இடைத்தேர்தல் முடிவானது லட்சக்கணக்கான மக்களின் அரசியல் செய்தியை அனுப்பி உள்ளது. அரசு மீது மக்கள் மத்தியில் பெரும் அவநம்பிக்கை உள்ளது, இந்த முடிவே அதற்கு அடையாளமாகும். மோடி அரசின் மீது மக்கள் மகிழ்ச்சியற்று உள்ளனர். ஜி.எஸ்.டி அதிகமான மக்களின் வேலைவாய்ப்பை பறித்துவிட்டது, தொழிலையும் பாதித்துவிட்டது. சமூக நீதிக்கான வெற்றியாகும். பா.ஜ.க ஒருபோதும் அதனுடைய வாக்குறுதியை நிறைவேற்றியது கிடையாது” என்றார்.
இதனை அடுத்து லக்னோவில் உள்ள மாயாவதி இல்லத்திற்கு சென்ற அகிலேஷ் நன்றியை தெரிவித்துக்கொண்டார். பதிலுக்கு மாயாவதி வாழ்த்துக்கள் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. #TamilNews