செய்திகள்

உள்ளூர் டி20 கிரிக்கெட்டில் அதிசயம்: ரன் ஏதும் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய சிறுவன்

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட்டில் எதிர் அணிக்கு ரன் ஏதும் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளையும் ஒரு சிறுவன் வீழ்த்தியது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் பாவர் சிங் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. உள்ளூர் மைதானத்தின் உரிமையாளர் தனது தாத்தாவின் நினைவாக இதை நடத்தினார். இந்த போட்டியில் இரண்டு கிரிக்கெட் அகாடமியைச் சேர்ந்த அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த திஷா கிரிக்கெட் அகாடமி அணி 20 ஓவர் முடிவில் 156 ரன்கள் எடுத்தது. இரண்டாவது பேட்டிங் செய்த பியர்ல் அகாடமி அணி 36 ரன்களில் சுருண்டது. திஷா அணியின் வீரரான ஆகாஸ் சவுத்ரி ரன் எதுவும் விட்டுக்கொடுக்காமல் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.

 
ஆகாஸ் தனது முதல் மூன்று ஓவரில் தலா இரண்டு விக்கெட்டை வீழ்த்தினார். கடைசி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டுடன் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். மொத்தமாக தான் வீசிய 4 ஓவரில் எதிர் அணிக்கு எந்த ரன்னும் விட்டுக்கொடுக்காமல் 10 விக்கெட்டுகளையும் மொத்தமாக அள்ளினார்.


ஆகாஸ் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவர். 15 வயதான இவர் ஜெய்ப்பூரில் ஆரவல்லி கிரிக்கெட் கிளப்பில் யாதவ் என்பவரிடம் பயிற்சி பெற்று வருகிறார்.