செய்திகள்

ஜெயலலிதா மரணத்தை கொச்சைப்படுத்துவதா?: டாக்டர் சரவணனுக்கு ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. கண்டனம்

ஜெயலலிதா மரணத்தை கொச்சைப்படுத்தும் டாக்டர் சரவணன் மீது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்பேன் என்று ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

மாலை மலர்

மதுரை:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் வைக்கப்பட்டு இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கைரேகை குறித்து தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் சர்ச்சை எழுப்பி இருந்தார்.

இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். மேலும் வழக்கு தொடர்பாகவும், கைரேகை குறித்தும் அவர் சில கருத்துக்களை நேற்று தெரிவித்தார். இதற்கு ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலின்போது எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அம்மா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கையெழுத்திட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

எனவே சுயநினைவோடு அரசு டாக்டர் முன்னிலையில் அவர் கைரேகையை பதிவு செய்தார். இதில் எந்த வித முரண்பாடும் இல்லை. ஆனால் இடைத்தேர்தல் தோல்வியை தாங்கி கொள்ள முடியாத தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் தேவையற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி வருகிறார்.

கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விட்டு கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகளை அவமதிக்கும் முறையில் கருத்து தெரிவித்து வருகிறார். உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை டாக்டர் சரவணன் அரசியல் ஆக்குகிறார். இதுகுறித்து சட்டவல்லுனர்களுடன் ஆலோசித்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன்.

1½ கோடி தொண்டர்களின் தெய்வமாக போற்றப்படும் மறைந்த முதல்-அமைச்சர் அம்மா மரணத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை டாக்டர் சரவணன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் எங்கள் கட்சியின் மேலிடத்தின் அனுமதி பெற்று அவர் மீது சட்டப்படி உரிய நட வடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.