புதுச்சேரி:
துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு புதுவைக்கு வந்த போது அவரை வரவேற்க சென்ற ரங்கசாமியிடம் சோதனை நடத்தப்பட்டது. ரங்கசாமியிடம் சோதனை நடத்தியதற்கு என்ஆர்.காங்கிரசார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ரங்கசாமி மீதான அவமதிப்பை கண்டித்தும் கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் மீது பொய்வழக்கு தொடர்ந்ததை கண்டித்தும் வன்னியர் கூட்டமைப்பு சார்பில் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்தனர்.
இதற்காக மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை சந்திப்பில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு அதிரடி அழகானந்தம் தலைமை வகித்தார். கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் சந்திரசேகரன் மற்றும் புதுவை வன்னியர் நல கூட்டமைப்பு, இளம் தலைமுறையினர் இயக்கம், வன்னியர் சங்கம், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் நல பேரவை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
ஊர்வலம் புறப்பட்ட சிறிதுதூரத்தில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.