செய்திகள்

2-வது நாளாக சேவை முடங்கியது - ஏர்செல் அலுவலகங்களில் வாடிக்கையாளர்கள் முற்றுகை

தமிழகத்தில் ஏர்செல் சேவை இன்று 2-வது நாளாக முடங்கியதால் ஏர்செல் அலுவலகங்களில் வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர்.

சென்னை:

தமிழகத்தில் ஏர்செல் சேவை இன்று 2-வது நாளாக முடங்கியது.

தனியார் தகவல் தொடர்பு நிறுவனங்களில் முன்னணியாக செயல்பட்டு வந்த ஏர்செல் நிறுவனத்தின் நெட்ஒர்க் சேவை நேற்று முதல் பாதித்தது.

சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் செல்போன் தொடர்பு கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். ஏர்செல் நிறுவனத்தில் 8000-க்கும் மேற்பட்டவர்களில் 6000-க்கும் மேற்பட்டவர்கள் செயல்படவில்லை.

செல்போன் கோபுரங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களுக்கு ஏர்செல் நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிலுவை தொகை பாக்கி இருப்பதால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதேபோல மற்ற நெட் ஒர்க்குகளை பயன்படுத்துவதற்காக கட்டணம் செலுத்தாததால் ஐடியா, வோடோபோன் ஆகிய இணைப்புகளில் இருந்து ஏர்செல் மொபைலுக்கு அழைக்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்த காரணங்களால் மொபைல் எண்ணை மாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சென்னையில் ஏர்செல் நிறுவனங்களின் அலுவலகம் வேப்பேரி, சேத்துப்பட்டு, வண்ணாரப்பேட்டை, அண்ணாநகர், தியாகராய நகர், கீழ்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ளன.

சேவை கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் அலுவலகங்களை முற்றுகையிட்டனர். நகரின் அனைத்து ஷோரூம்களிலும் வாடிக்கையாளர்கள் திரண்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். நெட்ஒர்க் பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால் வேறு நெட் ஒர்க்கிற்கு மாற வாய்ப்பு தர வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென சேவை 2 நாட்களாக பாதிக்கப்பட்டதால் திடீர் என எண்களை மாற்ற முடியாமல் தவிக்கின்றனர். கீழ்ப்பாக்கத்தில் 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் அலுவலகத்தை மூடிவிட்டனர்.

இதுதொடர்பாக வாட்ஸ்-அப்பில் காட்டுத்தீ போய் தகவல் பரவி வருகிறது. ஏர்செல் நிறுவனத்தின் சேவை முடங்கியதால் அதன் சந்தாதாரர்கள் வேறு நெட்ஒர்க்கிற்கு மாறுவதற்கு 28-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்குள்ளாக எண்களை பயன்படுத்தி மாறிக்கொள்ள வேண்டும் என்றும் அதன் பின்னர் மாற முடியாது என்றும் அந்த தகவல் உலா வருகிறது.

வாட்ஸ்-அப் தகவல் உண்மைதானா? என்பதை உறுதி செய்ய ஏர்செல் நிறுவனத்தினர் தயாராக இல்லை. ஆனாலும் சென்னை வாடிக்கையாளர்கள் தற்போது வேறு நெட் ஒர்க்கிற்கு மாறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். #tamilnews

SCROLL FOR NEXT