செய்திகள்

தமிழகத்தில் ‘ஏர்செல்’ சேவை முடங்கியது - வாடிக்கையாளர்கள் கடும் அவதி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ‘ஏர்செல்’ செல்போன் சேவையில் கடந்த சில நாட்களாகவே பாதிப்பு இருந்து வருகிறது. நேற்று பெரும்பாலான டவர்கள் இயங்காததால், ‘ஏர்செல்’ சேவை முற்றிலும் முடங்கியது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ‘ஏர்செல்’ செல்போன் சேவையில் கடந்த சில நாட்களாகவே பாதிப்பு இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று பெரும்பாலான டவர்கள் இயங்காததால், ‘சிக்னல்’ கிடைக்காமல் ‘ஏர்செல்’ சேவை முற்றிலும் முடங்கியது. இதனால் செல்போன் மூலம் மற்றவர்களிடம் பேச முடியாமலும், அழைப்புகளை ஏற்க முடியாமலும் பொதுமக்கள் பரிதவிப்புக்கு உள்ளாகினர்.

செல்போன் மூலம் முக்கிய தகவல்கள், அவசர செய்திகள் பரிமாறப்படும் சூழ்நிலையில், ‘ஏர்செல்’ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும், வியாபாரிகளும், அலுவலக ஊழியர்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.

எனவே சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களில் உள்ள ஏர்செல் மையங்களுக்கு பொதுமக்கள் சென்று முறையிட்டனர். எனினும் முறையான விளக்கம் கிடைக்காததால் ஊழியர்களுடன் வாக்குவாதமும் நடந்தது.

‘ஏர்செல்’ சேவை முடங்கியது தொடர்பாக அந்த நிறுவனத்தின் தென்னிந்திய பொறுப்பாளர் சங்கரநாராயணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள 9 ஆயிரம் டவர்களில் வாடகை பிரச்சினையால் 6 ஆயிரத்து 500 டவர்களுடைய இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சிக்னல் கோளாறால் 25 லட்சம் வாடிக்கையாளர்கள் மற்ற செல்போன் சேவை நிறுவனத்துக்கு மாறுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர். அதன்படி இன்று(நேற்று) மட்டும் 8 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.

ஏர்செல் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #tamilnews

SCROLL FOR NEXT