செய்திகள்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு- ப சிதம்பரத்தை கைது செய்ய 26-ந்தேதி வரை தடை நீடிப்பு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தையும், கார்த்தி சிதம்பரத்தையும் நவம்பர் 26-ந்தேதி வரை கைது செய்ய தடை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். #KartiChidambaram #SupremeCourt #AircelMaxis #PaChidambaram

மாலை மலர்

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் 2006-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது.

இந்த முதலீடு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்கு பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஏர்செல்-மேக்சிஸ் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது கடந்த ஜூன் 13-ந்தேதி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பின்னர் துணை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 25-ந்தேதி ப.சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் கோரியதன் அடிப்படையில் கடந்த மே மாதம் 3-ந்தேதி முதல் பல்வேறு நேரங்களில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தடை விதித்தது. கடைசியாக நவம்பர் 1-ந்தேதி (இன்று) வரை இந்த தடையை நீட்டித்தது.

இந்த நிலையில் ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை நேற்று மனுதாக்கல் செய்தது.

இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ப.சிதம்பரத்தையும், கார்த்தி சிதம்பரத்தையும் நவம்பர் 26-ந்தேதி வரை கைது செய்ய தடையை நீட்டித்து நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் பல நிலுவையில் இருப்பதாகவும் உடனே விசாரிக்க முடியாது என்றும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் மறுத்தது.