செய்திகள்

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது - 5 வீரர்கள் பலி

அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் பரிதாபமாக பலியாகினர்.

மாலை மலர்

கவுகாத்தி:

அருணாச்சலப்பிரதேசம் மாநிலம் டவாங் மாவட்டத்தில் இன்று காலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான MI-17 V5 ஹெலிகாப்டரில் வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதில் 5 விமானப்படை வீரர்கள் மற்றும் 2 ராணுவ வீரர்கள் இருந்தனர்.

இந்நிலையில், காலை 6 மணியளவில் சுனா என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது ஹெலிகாப்டர் திடீரென பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 5 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து விமானப் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.