செய்திகள்

பயங்கரவாத முகாம்களில் எத்தனை பேர் இறந்தனர் என்பதை நாங்கள் கணக்கிட இயலாது - விமானப்படை தளபதி

இந்திய விமானப்படை தாக்குதல் குறித்து இந்திய விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார். #BSDhanoa #IAF #AirChiefMarshal

மாலை மலர்

கோவை:

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படையினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இது குறித்து கோவை சூலூர் பகுதியில் இந்திய விமானப்படை தளபதி பி. எஸ்.தனோவா முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: 

இந்திய விமானப்படை தளம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. நம்மிடம் சிறந்த ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளன. பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானத்துக்கு எதிராக மிக்21 ரக விமானம் பயன்படுத்தப்பட்டது.  மிக் விமானங்கள் பழைய விமானங்கள் அல்ல, நவீனமாக்கப்பட்டவை. அவற்றை ஏன் பயன்படுத்தக்கூடாது?

இந்த மிக் 21 ரக விமானங்களில் அதிநவீன ஏவுகணைகள், ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்தப்பட்ட பயங்கரவாத அமைப்பின் முகாம்களில் எத்தனை பேர் இருந்தனர், எவ்வளவு பேர் இறந்தனர்? என்பதை எங்களால் கணக்கிட இயலாது. அது தொடர்பாக நாங்கள் விளக்கம் அளிக்கக் கூடாது. அரசாங்கம்தான் அதுபற்றி அறிவிக்க வேண்டும். இலக்குகளை தாக்கினோமா இல்லையா என்பதைத் தான் நாங்கள் பார்ப்போம். 

பாகிஸ்தானில் இருந்து திரும்பி வந்த இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் உடற்தகுதி குறித்து முழுவதும் பரிசோதித்து, உறுதி செய்யப்பட்ட பின்னரே அவர் பணிபுரிந்த அதே பிரிவில் சேர்க்கப்படுவார். மேலும் வரும் செப்டம்பர் மாதம் ரஃபேல் விமானம் விமானப்படையில் சேர்க்கப்படும். 

இவ்வாறு அவர் பேசினார். #BSDhanoa #IAF #AirChiefMarshal