மலேசியா நாட்டின் குறைந்த கட்டண விமானச்சேவை நிறுவனமான ஏர் ஏசியா, பெங்களூரு நகரை தலைமை இடமாக கொண்டு கடந்த 2013-ம் ஆண்டு இந்தியாவில் விமானச் சேவையை தொடங்கியது. முதலில் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையில் விமானச் சேவையை தொடங்கிய இந்த நிறுவனத்தின் 49 சதவீதம் பங்குகள் டாட்டா சன்ஸ் நிறுவனத்திடம் உள்ளது.
உள்நாட்டு விமானச் சேவையை தொடர்ந்து வெளிநாட்டு விமானச் சேவைகளையும் தொடங்கியுள்ள ஏர் ஏசியா கவர்ச்சிகரமான கட்டண சலுகைகளை அவ்வப்போது வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில், வெளிநாட்டு விமானச் சேவைக்கான லைசென்ஸ் பெறுவதற்கு முறைகேடான வழிகளை இந்நிறுவனம் பயன்படுத்தியதாக சமீபத்தில் தெரியவந்தது.
மத்திய அரசில் உள்ள உயர் அதிகாரிகளை பல்வேறு வழிகளில் சரிகட்டி சர்வதேச விமானச் சேவைக்கான லைசென்ஸ் வழங்குவதற்கான விதிமுறைகளை தளர்த்தியும், மாற்றியும் இந்த முறைகேடு நடந்துள்ளதை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
குறிப்பாக, இந்த லைசென்ஸ் பெறுவதற்கான 20 விதிமுறைகளில் ஐந்தாவது விதிமுறையில் இந்தியாவில் இருந்து சர்வதேச விமானச் சேவையை தொடங்க வேண்டுமானால், இந்திய விமான போக்குவரத்து துறையில் ஐந்தாண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
டோனி பிரான்சிஸ்
இதைதொடர்ந்து, ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனர் (சி.இ.ஓ.) மலேசியா நாட்டை சேர்ந்த டோனி பிரான்சிஸ், ஏர் ஏசியா நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.வெங்கடராமன், விமானச்சேவை ஆலோசகர் தீபக் தல்வார் மற்றும் பெயர்கள் வெளியிடப்படாத அரசு அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.