ஈரோட்டில் மேம்பாலம் அடிக்கல் நாட்டு விழா மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா, அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை கோவை வந்தார்.
அங்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் தலைசிறந்த மாநிலமாக வரவேண்டும் என்று ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை தீட்டினார். அவருடைய பாதையில், நாங்கள் ஆட்சி நடத்தி வருகிறோம். வறட்சி நிவாரண நிதி வழங்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கொங்கு மண்டல விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று தென்னை மரத்தில் இருந்து நீரா பானம் இறக்க அனுமதி வழங்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆறுகளில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும். பொதுமக்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லாமல் குறைந்த விலையில் மணல் கிடைக்க இது உதவியாக இருக்கும். ஏற்கனவே குடிமராமத்து திட்டம் மூலம் குளங்களை தூர்வார ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. மேலும் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டு ஏரிகள், குளங் களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு மலேசியாவுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக துணை சபாநாயகர் தம்பிதுரை மூலம் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும்.
ஜெயலலிதா அறிவித்தபடி எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைக்கப்படும். இதற்காக மத்திய அரசு தேர்வு செய்யும் இடத்தில் அந்த மருத்துவமனை கட்டப்படும். ஒரு திட்டம் தங்கள் பகுதிக்கு வரவேண்டும் என்ற அடிப்படையில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காவிட்டால் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிடுவோம் என்று எம்.எல்.ஏ.க்கள் கூறி உள்ளனர்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியாக ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. இதில் உள்ள குறைபாடுகள் குறித்து வணிகர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து உள்ளனர். ஜி.எஸ்.டி. தொடர்பான கூட்டம் நடக்கும்போது, வணிகர்களின் கருத்துகளை அறிந்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
நாங்கள் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறோம். மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வருவதால், எங்கள் ஆட்சி மீது யாரும் குறைகூற முடியாது. தமிழகத்தில் ஆட்சியை கலைக்க தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வழிகளில் முயற்சி செய்தார். ஆனால் அந்த முயற்சி நிறைவேறவில்லை. இதனால் அவர் இந்த ஆட்சியை பா.ஜனதாவின் பினாமி ஆட்சி என்று கூறி வருகிறார்.
மத்தியில் பா.ஜனதா ஆட்சியின்போது தி.மு.க. கூட்டணி வைத்து இருந்தது. அப்போது அவர் பா.ஜனதா குறித்து எந்த விமர்சனமும் செய்யவில்லை.
மத்தியில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆட்சியின்போது 14 வருடம் மந்திரிசபையில் தி.மு.க. இடம்பெற்று இருந்தது. அப்போது தமிழகத்துக்கு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்சினையில் அவர்களிடம் அதிகாரம் இருந்தபோதும் கூட அதை தீர்த்து வைக்கவில்லை.
ஆனால் காவிரி நதிநீர் பிரச்சினையில் ஜெயலலிதா தமிழக உரிமையை நிலைநாட்டினார். காவிரி நதிநீர் குழு அமைக்க வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கிலும் விரைவில் தீர்ப்பு வெளியாகி தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும். காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.