பாராளுமன்ற மேல்- சபையில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 18 எம்.பி.க்கள் இருக்கிறார்கள்.
தற்போதைய நிலவரப்படி அ.தி.மு.க.-12, தி.மு.க.-3, இந்திய கம்யூனிஸ்டு-1, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு-1 என்ற எண்ணிக்கையில் எம்.பி.க்கள் உள்ளனர். கனிமொழி கடந்த மாதம் 29-ந்தேதி மேல்-சபை எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால் இந்த இடம் காலியாக உள்ளது.
மேல்-சபை எம்.பி.க்களின் பதவி காலம் 6 ஆண்டுகளாகும். சுழற்சி முறையில் இந்த 18 இடங்களும் தேர்தல் மூலம் நிரப்பப்படும். அந்த வகையில் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந்தேதியுடன் மேல்-சபை எம்.பி.க்கள் கே.ஆர்.அர்ஜுனன், டாக்டர் லட்சுமணன், மைத்ரேயன், ரத்தினவேல் (4 பேரும் அ.தி.மு.க.) மற்றும் டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு) ஆகிய 5 பேரின் பதவி காலம் முடிகிறது.
ஏற்கனவே கனிமொழி எம்.பி. இடம் காலியாகி விட்டதால் 6 மேல்-சபை இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டியது உள்ளது. அடுத்த வாரம் இந்த 6 இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.
மேல்-சபை எம்.பி.க்களை தமிழக எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்வார்கள். ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 39 எம்.எல்.ஏ.க்கள் வாக்குகள் தேவை. அந்த அடிப்படையில் கணக்கிட்டால் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தலா 3 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும்.
அ.தி.மு.க. அல்லது தி.மு.க. சார்பில் கூடுதலாக ஒருவர் நிறுத்தப்பட்டால் போட்டி ஏற்படும். இல்லையெனில் போட்டியின்றி தேர்வு செய்ய முடியும்.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கூட்டணி உடன்பாடு செய்யப்பட்டபோது பா.ம.க.வுக்கு ஒரு மேல்-சபை எம்.பி. இடத்தை தருவதாக அ.தி.மு.க. சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அப்படி பா.ம.க.வுக்கு ஒரு இடம் ஒதுக்கும்பட்சத்தில் அ.தி.மு.க. சார்பில் மேல்- சபைக்கு இந்த தடவை 2 எம்.பி.க்களைதான் தேர்வு செய்ய முடியும்.
இந்த நிலையில் பா.ஜனதா மேலிட தலைவர்கள் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகும் மேல்-சபை எம்.பி. பதவிகளில் ஒன்றை தங்களுக்கு ஒதுக்கி தருமாறு அ.தி.மு.க.விடம் கோரிக்கை விடுத்தனர். மத்திய மந்திரிசபையில் வெளியுறவுத் துறை மந்திரியாக பொறுப்பேற்று இருக்கும் ஜெய்சங்கர் ஐ.எப்.எஸ். அதிகாரியாக இருந்தவர்.
தமிழகத்தைச் சேர்ந்த அவரை தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்ற மேல்- சபைக்கு தேர்வு செய்ய பா.ஜனதா தலைவர்கள் விரும்புகிறார்கள். எனவே அவருக்காக ஒரு மேல்-சபை இடத்தை ஒதுக்கி தரும்படி கேட்டனர்.
ஆனால் இது அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால்தான் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததாக பேசப்படுகிறது.
மேலும் டெல்லி பா.ஜனதாவுக்கு தமிழக அரசு அடிபணிந்து போவதாகவும் ஒரு விமர்சனம் உள்ளது. இந்த நிலையில் பாரதிய ஜனதாவுக்கு மேல்-சபை எம்.பி. பதவியையும் விட்டுக்கொடுத்தால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டு விடும் என்ற அச்சம் அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே விரைவில் தமிழகத்தில் வேலூர் பாராளுமன்ற இடைத்தேர்தல், நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளன. இந்த நிலையில் பாரதிய ஜனதாவுக்கு மேல்- சபை எம்.பி. இடத்தை கொடுத்தால் அது தேர்தலில் எதிரொலிக்க கூடும் என்ற தயக்கமும் அ.தி.மு.க. தலைவர்களிடம் நிலவுகிறது.
அ.தி.மு.க.வின் இந்த தயக்கத்தை புரிந்து கொண்ட பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஜெய்சங்கரை தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யும் திட்டத்தை கைவிட்டுள்ளனர். அவரை குஜராத் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் இருந்து மேல்-சபை எம்.பி.க்களாக இருந்த அமித்ஷா, ஸ்மிருதிரானி இருவரும் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தல் மூலம் பாராளுமன்ற மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.
இதனால் குஜராத்தில் இருந்து தேர்வான எம்.பி. பதவியை அவர்கள் இருவரும் ராஜினாமா செய்துள்ளனர். எனவே அந்த இடங்களில் ஒன்றில் இருந்து ஜெய்சங்கரை பாராளுமன்றத்துக்கு கொண்டு வர பா.ஜனதா தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதற்கிடையே தமிழ்நாட்டில் இருந்தும் மேல்- சபை பதவி ஒன்றை அ.தி.மு.க.விடம் பெற்று விட வேண்டும் என்பதில் பா.ஜனதா தீவிரமாக உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவரை மேல்-சபை எம்.பி.யாக்க திட்டமிட்டு பா.ஜனதா மேலிட தலைவர்கள் அ.தி.மு.க.வை வலியுறுத்தியபடி உள்ளனர்.
ஆனால் பாரதிய ஜனதாவுக்கு ஒரு மேல்-சபை எம்.பி. பதவி இடத்தை அ.தி.மு.க. விட்டு கொடுக்குமா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. மேல்-சபையில் 12 எம்.பி.க்களுடன் இருக்கும் அ.தி.மு.க.வுக்கு 4 எம்.பி.க்களின் பதவி காலம் முடிவதால் மொத்த பலம் எண்ணிக்கை 8 ஆக குறையும்.