டெஹ்ரான்:
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் 787 டிரீம் லைனர்’ விமானம் ஜெர்மனி நாட்டின் மத்திய பகுதியில் உள்ள பிராங்க்பிரட் நகரில் இருந்து இன்று டெல்லி நோக்கி புறப்பட்டது. நடுவானில் ஈரான் நாட்டின் வான் எல்லை வழியாக பறந்தபோது, முன் பக்கத்தில் விமானி அறையின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடியில் திடீரென்று விரிசல் ஏற்பட்டது.
இதை அறிந்த விமானிகள் அருகாமையில் உள்ள டெஹ்ரான் விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டனர். இதையடுத்து, இன்று காலை 6.20 மணியளவில் அந்த விமானம் உடனடியாக டெஹ்ரான் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானத்தின் வெப்பநிலையை சீராக பராமரிக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை டெல்லிக்கு அழைத்துவர மும்பையில் இருந்து போயிங் 737 ரக விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
டெஹ்ரானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ‘போயிங் 787 டிரீம் லைனர்’ விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்வதற்காக பொறியாளர்கள் சிலரும் அந்த விமானத்தில் சென்றுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.