திருச்சி:
திருச்சி கீழகல்கண்டார் கோட்டையை சேர்ந்த விவசாய பெண் தொழிலாளர்கள் சங்க தலைவர் செல்வராணி தலைமையில் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சி மாநகராட்சி 63-வது வார்டு கீழகல்கண்டார்கோட்டையில் அழகு நாச்சியம்மன் கோவில் அருகில் நத்தகளம் எனப்படும் விவசாய களத்து மேட்டில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை கழிவுநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினால் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படும். இதனை இங்கு அமைக்க கூடாது என பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையின்போதும் வெளிநடப்பு செய்தோம். இவ்வளவு எதிர்ப்பையும் மீறி போலீஸ் பாதுகாப்புடன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும். மேலும், இந்த சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதேபோல, திருச்சி நகரில் உள்ள பல்வேறு மகளிர் சுய உதவி குழுவின் நிர்வாகிகள் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கொரோனா காலத்தில் கடனுக்கான தவணைகளை ஆகஸ்டு 30-ந் தேதி வரை வசூலிக்க கூடாது என அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவினையும் மீறி வங்கிகள், நிதி நிறுவனங்கள் மகளிர் சுய உதவி குழுவினரிடம் கட்டாய வசூலில் ஈடுபட்டு வருவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி மனு கொடுத்தனர்.