தமிழ்நாட்டில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கடந்த வருடம் பருவ மழை முற்றிலும் பொய்த்து விட்டது.
இதனால் தமிழ்நாடு முழுவதுமே அணைகள், ஏரி, குளங்களில் தண்ணீர் இல்லை. காவிரி தண்ணீரும் வரவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் வறட்சி தாண்டவம் ஆடியது. இத்துடன் வர்தா புயலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் என்றும் இல்லாத அளவுக்கு உணவு தானிய உற்பத்தியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 2016-17 கணக்கின்படி 60 லட்சத்து 32 ஆயிரம் டன் உணவு தானியம் உற்பத்தியாகி இருக்கிறது. இது, அரசு நிர்ணயித்த இலக்கில் 3-ல் 1 பங்கு ஆகும்.
கடந்த 141 வருடத்தில் இந்த அளவுக்கு உணவு தானிய உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதன் பாதிப்பு இன்னும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று விவசாய துறை அமைச்சர் துரைக்கண்ணு சட்டசபையில் கூறினார்.
மேலும் அவர் கூறும் போது, இந்த ஆண்டு வழக்கமான மழை பெய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அரசு, விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து இந்த நிதியாண்டில் 100 லட்சம் உணவு தானியத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். கடவுள் கருணையால் மழை நன்றாக பெய்தால் இதன் இலக்கு எட்டப்படும் என்றும் கூறினார்.
அரசு நுண்பாசன திட்டத்தை ஊக்கப்படுத்தி வருகிறது. இதன்படி சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், நடுத்தர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு இதற்காக ரூ.804 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
2011-ம் ஆண்டு பல்வேறு தொழில்நுட்ப உதவியின் காரணமாக தமிழ்நாட்டில் உணவு தானிய உற்பத்தி 100 லட்சம் டன்னை தாண்டியது. 2015-ல் 113 லட்சம் டன்னாக உயர்ந்தது. இதற்காக மத்திய அரசின் விருதும் தமிழ்நாட்டுக்கு கிடைத்தது.
2015-ம் ஆண்டு வரை 5 ஆண்டில் 43 சதவீத அளவுக்கு உணவு தானிய உற்பத்தி அதிகரித்து இருக்கிறது. ஆனால், இந்த ஆண்டுதான் வறட்சி காரணமாக கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.
தமிழ்நாட்டில் 2011-12-ல் 101 லட்சத்து 52 ஆயிரம் டன் உணவு தானியமும், 2012-13-ல் 56 லட்சத்து 5 ஆயிரம் டன்னும், 2013-14-ல் 110 லட்சத்து 2 ஆயிரம் டன்னும், 2014-15-ல் 127 லட்சத்து 95 ஆயிரம் டன்னும், 2015-16-ல் 113 லட்சத்து 69 ஆயிரம் டன்னும், 2016-17-ல் 60 லட்சத்து 32 ஆயிரம் டன்னும் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.