படித்துறை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது 
செய்திகள்

முக்கடல் சங்கமத்தில் படித்துறை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது

ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் படித்துறை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது.

கன்னியாகுமரி:

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடலில் ஆனந்த குளியல் போடுவார்கள். மேலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை போன்ற புண்ணிய நாட்களில் இந்துக்கள் சங்கிலித்துறை கடற்கரையில் தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்து புனித நீராடுவார்கள். அப்படிபட்ட புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உள்ள சங்கிலித்துறை கடற்கரையில் உள்ள படிக்கட்டுகள் சேதம் அடைந்து பாசிபிடித்து பராமரிக்கப்படாமல் காணப்பட்டது.

இதனால் அமாவாசை அன்று புனித நீராட வரும் பக்தர்கள் கீழே விழுந்து ரத்தகாயத்துடன் எழுந்து செல்லும் அவலநிலை இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பேரூராட்சி சார்பில் சேதம் அடைந்த படித்துறையை அகற்றிவிட்டு புதிய படித்துறை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இந்த பணி முழுமையாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கட்டுமானப்பணிகள் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உள்ள சங்கிலித்துறை கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடுவதற்கான படிக்கட்டுகள் அமைக்கும் பணியும் நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதேபோல் கன்னியாகுமரி பகுதியில் தனியார் கட்டுமான பணிகளும் நேற்று முதல் தொடங்கியது.

SCROLL FOR NEXT