செய்திகள்

கேரளாவில் பெண் விவகாரத்தில் பதவி இழந்த ஏ.கே. சசீந்திரன் மீண்டும் மந்திரியாக நாளை பதவியேற்பு?

கேரளாவில் செல்போனில் பேசிய பெண்ணுடன் ஆபாசமாக பேசியதாக மந்திரி பதவியை இழந்த ஏ.கே. சசீந்திரன் மீண்டும் நாளை மந்திரி பதவியேற்க உள்ளார். #AKSaseendran

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில் தேசியவாத கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஏ.கே.சசீந்திரன் போக்குவரத்து துறை மந்திரியாக இருந்தார். இவர் பதவியில் இருந்த போது செல்போனில் பேசிய பெண்ணுடன் ஆபாசமாக பேசியதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து அவர் பதவி விலகினார். இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இன்னொரு எம்.எல்.ஏ. தாமஸ் சாண்டிக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது.

அவர் மீதும் சமீபத்தில் அரசு நிலத்தை முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரும் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மந்திரி சபையில் ஒரு இடம் காலியாக இருந்தது.

இந்நிலையில் ஏ.கே.சசீந்திரன் மீது புகார் கூறிய பெண், அதனை திடீரென வாபஸ் பெற்றுக்கொண்டார். இதனால் ஏ.கே.சசீந்திரன் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். எனவே அவருக்கு மீண்டும் மந்திரி பதவி வழங்க வேண்டும் என தேசியவாத காங்கிரசார் கூறினர்.

கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் படேலும் இதனை வலியுறுத்தினார். இது பற்றி அவர் கூறும்போது, இப்பிரச்சினை பற்றி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.

இதையடுத்து கேரள மந்திரி சபையில் ஏ.கே.சசீந்திரனுக்கு மீண்டும் மந்திரி பதவி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் நாளை கேரள மந்திரியாக பதவி ஏற்பார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு கேரள எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஏ.கே.சசீந்திரனுக்கு மீண்டும் மந்திரி பதவி வழங்குவது சரியல்ல என்று அவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். #AKSaseendran