லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி மக்களவை தொகுதி எம்.பி.,யாக, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இருந்து வருகிறார். அமேதியில் வரும் 4 முதல் 6-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் செய்வதற்கு அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்துக்கு ராகுல் காந்தி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால், ராகுல் காந்தி வருகையை தள்ளி வைக்கும்படி மாவட்ட நிர்வாகம் கூறியது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உ.பி., காங்கிரஸ் மூத்த தலைவர் அகிலேஷ் சிங் கூறுகையில், மாநிலத்தில் நிலவும் பிரச்சனை குறித்து பேசுவார் என்பதால் ராகுல் காந்தி பயணத்துக்கு உ.பி., அரசு அனுமதி தர மறுத்துள்ளது. ராகுலின் பயணத்தால் அவர்கள் பயந்து போயுள்ளனர். தன்னுடைய சொந்த தொகுதிக்கு செல்ல ஒரு எம்.பி.,க்கு அனுமதி மறுப்பது தவறு என கூறினார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தியின் சுற்றுப்பயணத்துக்கு அமேதி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் யோகேஷ்குமார் கூறுகையில், ராகுல் காந்தி வருகைக்கு நாங்கள் எப்போதும் தடை சொன்னதில்லை. தசரா உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் 5-ம் தேதிக்கு பிறகு பயணத்தை மேற்கொள்ளலாம் என்றும், அவரது பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுப்பயணத்தை மாற்றிக் கொள்ள முடியுமா? என்றும் கேட்டு அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.
ஆனாலும் அவர் குறிப்பிட்ட நாள்களில் வருகை தந்தாலும் பாதுகாப்பு தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.