பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறும். சந்தைக்கு உள்ளூர் விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இதை தவிர வியாபாரிகளும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து மாடுகளை வாங்கி வந்து விற்பனை செய்வார்கள்.
வழக்கமாக சந்தைக்கு 3 ஆயிரம் மாடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் பொள்ளாச்சியில் மாட்டு சந்தை நடந்தது. மத்திய அரசு சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகள் வாங்க, விற்க தடை விதித்ததால் சந்தைக்கு மாடுகள் வரத்து மிகவும் குறைந்து இருந்தது. இதனால் சந்தை ‘களை’ இழந்து காணப்பட்டது. 50 மாடுகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
பெரும்பாலும் கேரளாவில் இருந்து அதிகளவு வியாபாரிகள் வருவார்கள். மாடுகள் வாங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் குறைந்த அளவே வியாபாரிகள் வந்திருந்தனர். மேலும் மாடுகள் இல்லாததால் மாடுகளை ஏற்றிச்செல்லும் லாரிகள் இயக்கப்படவில்லை. இந்த லாரிகள் மாட்டு சந்தைக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து மாட்டு வியாபாரிகள் கூறியதாவது:-
தென்இந்தியாவில் மிகப்பெரிய சந்தையான பொள்ளாச்சி சந்தைக்கு வாரத்தில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமைகளில் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். 2 நாட்களிலும் சேர்த்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வருவார்கள். மத்திய அரசின் இந்த உத்தரவால் சந்தைக்கு 50 மாடுகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
தமிழகம் முழுவதும் 125 மாட்டு சந்தைகள் உள்ளன. மத்திய அரசு தடை உத்தரவை திரும்ப பெறாவிட்டால் மாட்டு சந்தைகள் முடங்கும். தமிழகம் முழுவதும் இந்த தொழிலை நம்பி உள்ள வியாபாரிகள், தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள், லாரி டிரைவர்கள், வைக்கோல் விற்பனையாளர்கள், இறைச்சி கடை வியாபாரிகள், விவசாயிகள் என நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு கோடி பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரு வாரத்துக்கு ரூ.25 கோடி வீதம், ஒரு மாதத்துக்கு ரூ.100 கோடி வரை நடைபெறும் வர்த்தகம் பாதிக்கப்படும். பொள்ளாச்சி சந்தையில் மட்டும் வாரத்துக்கு ரூ.5 கோடி வரை பாதிக்கும். எனவே இறைச்சிக்காக மாடுகள் விற்கவோ, வாங்கவே கூடாது என்ற தடை உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.