அரிவாள் வெட்டு (கோப்புப்படம்) 
செய்திகள்

கள்ளக்காதல் தகராறு: ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்குள் புகுந்து ஊழியரை வெட்டிய வாலிபர்

கள்ளக்காதல் தகராறில் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்குள் புகுந்து ஊழியரை வெட்டிய வாலிபரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவி. இவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் வார்டு பாயாக வேலை பார்த்து வருகிறார். இன்று காலை அவர் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அந்த வார்டுக்கு வந்தார். திடீரென அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரவியை வெட்டினார்.

அதிர்ச்சி அடைந்த ரவி உயிர் தப்பிக்க ஆஸ்பத்திரி வளாகத்தில் ஓடினார். ஆனாலும் விரட்டிச்சென்ற வாலிபர் ரவியை சரமாரியாக வெட்டினார். இதனை கண்டு ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்கள் அலறியடித்தபடி ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே ஓட்டம் பிடித்தனர்.

இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்குள் ஆஸ்பத்திரி பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அரிவாளுடன் விரட்டிய வாலிபரை மடக்கி பிடித்தனர்.

அரிவாள் வெட்டில் ரவியின் தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியிலேயே அனுமதித்தனர்.

பிடிபட்ட வாலிபரை வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், தண்டையார்பேட்டை பரமேஸ்வரி நகரைச் சேர்ந்த அய்யப்பன் என்பது தெரிந்தது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்க்கும் கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவருக்கும் அய்யப்பனுக்கும் கள்ளக்காதல் இருந்தது.

இதற்கிடையே அந்த பெண் ரவியுடன் நெருங்கி பழகி உள்ளார். இதில் ரவிக்கும் அய்யப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ரவியை அரிவாளால் அய்யப்பன் வெட்டி உள்ளார்’ என்றனர்.

அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த ரவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் இன்று காலை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி பரபரப்பாக காணப்பட்டது.

SCROLL FOR NEXT