பகவதி அம்மன் கோவிலில் அத்வானி சாமி தரிசனம் செய்த காட்சி. அருகில் அவரது மகள் பிரதீபா உள்ளார். 
செய்திகள்

பகவதி அம்மன் கோவிலில் அத்வானி சாமி தரிசனம்

கேரளாவிற்கு 5 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள அத்வானி பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

முன்னாள் துணை பிரதமரும், பாரதிய ஜனதா மூத்த தலைவருமான அத்வானி ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையின் போது கேரளாவில் சுற்றுப்பயணம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 11-ந்தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஓணம் கொண்டாட்டங்களும் தொடங்கிவிட்டன.

இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு ஓணம் பண்டிகையையொட்டி 5 நாள் சுற்றுப் பயணமாக நேற்று முன்தினம் அத்வானி தனது மகள் பிரதீபாவுடன் கேரளா வந்தார். திருவனந்தபுரத்தில் அவரை முதல்-மந்திரி பினராயி விஜயன் சந்தித்து பேசினார்.

இதைத்தொடர்ந்து நேற்று அத்வானி தனது மகளுடன் திருவனந்தபுரம் அருகே மாராதிகுளம் பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் அவர் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார்.

அப்போது அத்வானியும், அவரது மகளும் கேரள மக்களுக்கு தங்களது ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். கேரளாவுக்கு வந்துள்ளது தங்கள் மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.

கேரள சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 8-ந்தேதி அத்வானி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அத்வானி வருகையையொட்டி அவர் தங்கும் இடங்கள் மற்றும் சுற்றிப்பார்க்க செல்லும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.