சென்னை:
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
பாலில் கலப்படம் தொடர்பாக எனக்கு வந்த தகவலின் அடிப்படையில் அதை நாங்கள் ஆய்வுக்கு உட்படுத்தியதில் சில தனியார் பாலில் ரசாயனம் கலந்து இருப்பது தெரியவந்தது. பாலில் கலப்படம் செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் அந்த முதலாளிகள் தங்களிடம் பணிபுரியும் ஆட்களை வைத்து கோர்ட்டில் அபராதம் செலுத்தி தப்பி விடுகிறார்கள்.
எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காக மீடியா வாயிலாக கலப்படம் குறித்து தெரிவித்தேன். எனவே பழிவாங்கும் நோக்கத்துடனே தனியார் பால் உரிமையாளர்களை மிரட்ட வேண்டும் என்ற எண்ணத்திலோ சொல்லவில்லை.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- பாலில் கலப்படம் செய்வதை பொறுத்தவரை சில நாட்களாக செய்திகள் வெளி வந்தன. சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் இதுபற்றி பேட்டி தந்ததையும் பார்த்தோம். கலப்படம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், அதை நிச்சயம் நிரூபிப்பேன். இல்லாவிட்டால் அது தற்கொலைக்கு சமம். தூக்கில் தொங்குவேன் என்றெல்லாம் கூறியிருந்தார்.
எனவே பாலில் கலப்படம் செய்பவர்கள் கோர்ட்டுக்கு சென்று தடை உத்தரவு பெறுவது தொடர்ந்து கொண்டே இருப்பதாக கூறுவதால் பாலில் கலப்படம் தொடர்ந்து கொண்டே இருக்குமா? அந்த கலப்படத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி:- சென்னை ஐகோர்ட்டில் 2 பொதுநல வழக்கு தொடரப்பட்டு அதில் ஒன்று பாலில் கலப்படம் தொடர்பான வழக்கு ஆகும். இதில் அரசு எடுத்த நடவடிக்கைகளை 2 வார காலத்துக்குள் சமர்ப்பிக்க கோர்ட்டு அறிவுறுத்தியது.
இதுதொடர்பாக அரசு துறை செயலாளர் கோர்ட்டில் விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் இதுபற்றி முழு விவரத்தையும் தெரிவிக்க இயலாத நிலை உள்ளது.
ஆனாலும் கலப்படம் தொடர்பாக எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. 32 மாவட்டங்களிலும் 886 மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதித்ததில் 187 மாதிரிகளில் பாலின் தரம் குறைந்தது தெரியவந்தது. அதன் மீது 143 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 81 வழக்குகளில் கோர்ட்டால் தண்டனை விதிக்கப்பட்டதில் ரூ.10 லட்சத்து 26 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. 338 பால் பொருட்களை பரிசோதித்ததில் 11 மாதிரிகள் குறைபாடுகள் கண்டு பிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாகவும் வழக்கு தொடரப்பட்டது. பாலில் கலப்படம் கண்டு பிடிக்க நவீன பரிசோதனை கருவிகளும் வாங்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
சென்னையில் 20 பால் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் அதில் தரமற்ற ஒரு பால் மாதிரியும் கண்டு பிடிக்கப்பட்டது. மாதவரம், மைசூர், கிண்டி, புனே ஆய்வகங்களுக்கும், 39 பால் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பால் கலப்படத்தை கண்டுபிடிக்க அமைக்கப்பட்டுள்ள குழு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. எனவே தவறு செய்தவர்களை இந்த அரசு ஒருபோதும் மன்னிக்காது. கடும் நடவடிக்கை எடுக்கும்.
துரைமுருகன் (தி.மு.க.):- கலப்பட பால் மீது எடுக்கப்படும் நடவடிக்கை பற்றி அமைச்சர் விவரித்தார். அவர் கூறும்போது, நடவடிக்கை எடுத்தால் கோர்ட்டுக்கு போய் விடுவதாக ஒரு தகவலையும் தெரிவித்தார்.
கோர்ட்டுக்கு போனாலும் கலப்படத்தை தடுத்தே தீருவேன் என்று கூறியிருக்க வேண்டும். கலப்படத்தை தடுப்பதில் அவர் உறுதியாக இருக்க வேண்டும்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி:- துரைமுருகன் கூறும் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். தமிழ்நாட்டிலே பால் முதற்கொண்டு எந்த பொருளிலும் கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
அதிலும் குழந்தைகள் பருக கூடிய பாலில் எந்த ரசாயனமோ, யூரியாவோ, ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற எந்தவித வேதிப்பொருளும் இருக்க கூடாது. அப்படி இருந்தால் கடும் குற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். இதை நாங்கள் சொன்னால் உடனே வெளியே சொல்லி வருகிறார்கள்.
உதாரணத்துக்கு நாங்கள் பாலை பரிசோதிக்க புனேக்கு மாதிரி அனுப்பினோம். அதை அங்குள்ளவர்கள் வாங்க மறுத்தனர். மறுநாள் பேப்பரில் பரிசோதனைக்கு பால் வரவில்லை என்ற செய்தியை கொடுக்கிறார்கள். உடனே நாங்கள் விமானம் மூலம் பரிசோதனைக்கு பால் அனுப்பினோம். அன்று மாலையில் பரிசோதனைக்கு பால் வந்தது என்று சொல்கிறார்கள்.
எனவே நாங்கள் ரகசியமாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. நீங்கள் சொல்வது போல் கோர்ட்டுக்கு போய் அபராதம் கட்டி தப்பிக்கும் வேலை இனி நடக்காது. பாலில் யார் கலப்படம் செய்தாலும் சட்டத்தின் முன் சமமாக கருதப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.