அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு பின் தினகரன் 20 எம்.எல்.ஏ.க்களுடன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என்றும் அவருக்கு ஆதரவு இல்லை என்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் கடிதம் கொடுத்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி அணிக்கும் தினகரன் அணிக்கும் இடையேயான மோதல் முற்றியது.
இந்த நிலையில் அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நேற்று நடந்தது. இதில் கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியும், அவர் நியமித்த நியமனங்கள் செல்லாது என்றும், இதே போல் அ.தி.மு.க.வில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத தினகரன் கட்சி நிர்வாகிகளை நீக்குவது, புதிதாக நியமிப்பது குறித்து வெளியாகும் எந்த ஒரு அறிவிப்பும் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இனி அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பே இல்லை, அந்தப் பதவி ரத்து செய்யப்படுகிறது என்றும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு பொதுச்செயலாளருக்குரிய அதிகாரம் அளிக்கப்படுவதாகவும் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் தேர்தல் கமிஷனில் இரு அணிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்களை வாபஸ் பெற்று கட்சி சின்னத்தை மீட்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கட்சி சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக முக்கிய நிர்வாகிகள் அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மான நகலுடன் டெல்லி செல்கிறார்கள். அங்கு தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மான நகலை தாக்கல் செய்கிறார்கள்.
தீர்மானத்தில் கூறியபடி பிரமாண பத்திரத்தை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கிறார்கள். இதற்கான கடிதமும் தேர்தல் கமிஷனில் கொடுக்கிறார்கள். அனேகமாக நாளை தேர்தல் கமிஷனில் பொதுக்குழு தீர்மான நகல் வழங்கப்படும் என்று தெரிகிறது.