செய்திகள்

திருவண்ணாமலையில் அமித்ஷா-வுக்கு அ.தி.மு.க.வின் இரு அணிகளும் வரவேற்பு

திருவண்ணாமலை வந்த பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா-வுக்கு அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. பிரமுகர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.

மாலை மலர்

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா 2 நாள் பயணமாக புதுச்சேரிக்கு நேற்று வந்தார். அங்கு, கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமித்ஷா, இரவு புதுச்சேரியிலேயே தங்கினார். இன்று காலை தனி ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு வந்தார்.

ஹெலிகாப்டர் இறங்குவதற்காக, திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய அமித்ஷாவை, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் வரவேற்றனர்.

அ.தி.மு.க. அணிகளும் மாறி மாறி வந்து அமித்ஷாவை வரவேற்றனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்.

டி.டி.வி. தினகரன் ஆதரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான பன்னீர்செல்வம், தூசி மோகன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் ராஜன் ஆகியோரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. பிரமுகர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து அமித்ஷாவுக்கு வரவேற்பு அளித்தனர்.

இதற்கிடையே, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அமித்ஷாவை வரவேற்க அ.தி.மு.க. எம்.பி. வனரோஜாவும், ஹெலிகாப்டர் வந்திறங்கும் அரசு கலைக் கல்லூரி வளாகத்திற்கு வந்தார். அப்போது, வனரோஜா எம்.பி.யை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். அமித்ஷா வரவேற்பாளர்கள் பட்டியலில் ‘உங்கள் பெயர் இல்லை. எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக உங்களை அனுமதிக்க முடியாது’ என்று பாதுகாவலர்கள் கூறினர்.

வனரோஜா எம்.பியை போலீசார் தடுத்து நிறுத்திய காட்சி.

இதேபோல் பாரதிய ஜனதா கட்சியினர், தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ரமணா ஆசிரமம் அருகே பைக் பேரணி நடத்த ஏற்பாடு செய்தனர். பைக் பேரணிக்கு போலீஸ் அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்தனர்.

இதனால் போலீசாருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழிசை தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுபோன்ற சம்பவங்களால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

இதையடுத்து, திருவண்ணாமலைக்கு வந்த அமித்ஷா, முதலில் அருணாசலேஸ்வரர் கோவில் அருகே கிரிவல பாதை-செங்கம் ரோட்டில் உள்ள ரமணா ஆசிரமத்திற்கு சென்றார்.


அங்கு சிறிது நேரம் தியானம் செய்தபிறகு, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்றார். அம்மனி அம்மன் கோபுரம் வழியாக சென்று அருணாசலேஸ்வரரை அமித்ஷா தரிசனம் செய்து வழிபட்டார்.

கோவில் நிர்வாகம் மற்றும் இந்து முன்னணி சார்பில் அமித்ஷாவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

அமித்ஷாவுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு இருப்பதால், டி.ஐ.ஜி. தமிழ்ச்சந்திரன் தலைமையில் எஸ்.பி.க்கள் பகலவன் (வேலூர்), பொன்னி (திருவண்ணாமலை) ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 1000 போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.