செய்திகள்

அ.தி.மு.க. மீது மக்கள் நம்பிக்கை இழப்பு: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி சிவகாமி பேட்டி

அ.தி.மு.க. இரு அணிகளாக செயல்படுவதால் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளதாகவும் தமிழக அரசு செயல்படாத அரசாக நீடிப்பதாகவும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி சிவகாமி பேட்டி அளித்துள்ளார்.

மாலை மலர்

சேலம்:

சமூக சமத்துவ படை நிறுவன தலைவரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சிவகாமி இன்று சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது-

அ.தி.மு.க. இரு அணிகளாக செயல்படுவதால் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. தமிழக அரசு செயல்படாத அரசாக நீடிக்கிறது. எந்த திட்டத்திற்கும் பணம் ஒதுக்கப்பட்டது என்பதும், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா? என்பதும் தெரியவில்லை. மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மாற்று இடத்தில் திறக்க கூடாது. தமிழகத்தில் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற பார்க்கிறது.

சேலம் மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களாக காலி மனை பட்டா யாருக்கும் வழங்கப்படவில்லை. இந்த திட்டம் அமலில் உள்ளதா ,ரத்து செய்யப்பட்டுள்ளதா? என்று தெரிய வில்லை.

மத்திய அரசின் முத்ரா வங்கி திட்டம் சரியாக செயல்படவில்லை. தாட்கோ திட்டத்தின் மூலம் கடன் உதவிகள் தாமதமாகி வருகிறது. எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர் பாதிக்கப்பட்டது தொடர்பான அனைத்து வழக்குகளையும் துரிதப்படுத்த வேண்டும்.

சேலத்தில் கிச்சிப்பாளையம் ரோடு பல ஆண்டுகளாக மிக மோசமான நிலையில் கிடக்கிறது. சேலத்தில் கடும் வறட்சி நிலவுவதால் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் ஏற்காட்டிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சத்துணவு ஊழியர்களுக்கு பணி நியமண ஆணை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. நீதிபதி கர்ணன் பிரச்சினையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலையிட்டு சுமூக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவருடன் மாவட்ட தலைவர் வெங்கடேசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.