செய்திகள்

அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: சபாநாயகரிடம் வெற்றிவேல் எம்.எல்.ஏ.மனு

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் இன்று சபாநாயகர் தனபாலை சந்தித்து அரசு கொறடா ராஜேந்திரனை நீக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ்.அணிகள் இணைந்ததை தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று கடிதம் கொடுத்தனர்.

இதை தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரையும் தகுதி நீக்கம் செய்ய அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்தார்.

இந்த பரிந்துரையை ஏற்று 19 எம்.எல்.ஏ.க்களும் ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், ஏழுமலை ஆகியோர் சட்டசபை செயலாளரை சந்தித்து நேரில் விளக்கம் அளித்தனர்.

ஆனால் இதை ஏற்காத சபாநாயகர் 19 பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அதை தொடர்ந்து 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் வருகிற 14-ந் தேதி 19 எம்.எல்.ஏ.க்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் இன்று சபாநாயகர் தனபாலை சந்தித்து அரசு கொறடா ராஜேந்திரனை நீக்க வேண்டும் என்று மனு கொடுத்தார்.

அதிகார துஷ்பிர யோகத்தில் ஈடுபடுவதால் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.