செய்திகள்

எச்.ராஜாவை சாரணர் இயக்க தலைவராக்க முயற்சி: அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கண்டனம்

பா.ஜனதாவின் எச். ராஜாவை தமிழக சாரண இயக்கத்தின் தலைவராக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவது குறித்து அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

சாரண- சாரணியர் இயக்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் எச்.ராஜாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களான கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தின் பள்ளி மாணவ, மாணவிகளிடையே செயல்படும் சாரண - சாரணியர் அமைப்புக்கு பா.ஜ.க. கட்சியின் தலைவர்களில் ஒருவராகவும், தமிழர் விரோதபோக்கை கடை பிடித்து வரும் எச். ராஜாவை தலைவராக்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், அதற்காக கல்வி துறை அதிகாரிகள் மறைமுகமாக மிரட்டப்படுவதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன.

தமிழகம் சமூக நல்லிணக்கமும், சமூக நீதி ஆகியவற்றின் தாயகமாகவும் திகழ்ந்து வருகிறது.

மாணவ- மாணவிகளுக்கு மத்தியில் சமத்துவ, சகோதரத்துவ எண்ணங்கள் அதிகமாக மேலோங்கியிருக்கும் மாநிலமாக திகழ்கிறது. எனவே சாரண-சாரணியர் அமைப்புக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசி வரும் எச்.ராஜாவை தலைவராக்க தமிழக அரசு முயற்சி செய்வது அதிர்ச்சி அளிக்கிறது.

இதை ஏற்க முடியாது. வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு சகிப்புத் தன்மை கொண்ட ஒரு நபரையே கொண்டு வந்து ஜெயலலிதா வழியில் செயல்பட வேண்டும் எனவும், எச்.ராஜாவை கொண்டு வரும் முயற்சியை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் நல்லக்கண்ணு கூறியதாவது:-

தமிழகத்தில் ஆட்சியாளர்கள் ஒற்றுமையின்றி பிரிந்து சண்டையிட்டு வருகின்றனர். இதன் மூலம் தமிழகத்தில் கால் ஊன்ற பா.ஜனதா முயற்சிக்கிறது. அ.தி.மு.க.வுக்கும், பா.ஜனதாவுக்கும் மறைமுக தொடர்பு இருந்து வருகிறது.

பா.ஜனதாவின் எச். ராஜாவை தமிழக சாரண இயக்கத்தின் தலைவராக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவது கண்டனத்துக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு சாரண-சாரணியர் (என்.எஸ்.எஸ்.) அமைப்பின் தலைவர் பதவியை தமிழக பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவிற்குத் தாரை வார்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குலக்கல்வி முறையை வரவேற்கும் பா.ஜ.க.வின் தேசிய செயலாளரான எச்.ராஜாவை சாரண - சாரணியர் இயக்கத்தின் தலைவராக்க தமிழக அரசு முயற்சிக்கிறது என்ற செய்தியை தமிழக மக்கள் ஒரு போதும் எற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தற்போது சாரணர் இயக்கத்தின் பாதுகாவலராக கவர்னரும், இணை காவலராக கல்வி அமைச்சரும் இருக்கும் நிலையில், தலைவர் பதவியை பா.ஜ.க.வுக்கு கொடுத்து பள்ளி மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் காவி நஞ்சை விதைக்க நினைக்கிறார்கள்.

இத்திரைமறைவு முயற்சிக்கு கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இத்தோடு எச். ராஜாவை போட்டியின்றி தேர்வு செய்ய சதி நடந்த நிலையில் ராஜாவிற்கு போட்டியாக களம் இறங்கிய முன்னாள் பள்ளி கல்வி இயக்குனர் மணி, ராஜாவுக்கு ஆதரவாக வாக்களிக்க மிரட்டப்படுகிறார் என்ற செய்தியும் ஜனநாயக மாண்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இச்செயல் மிகவும் வன்மையாக கண்டிக்கதக்கதாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவரான அஸ்லம்பாஷா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

மதநல்லிணக்கமும் அமைதியும் சகோதரத்துவமும் தழைத்தோங்கும் தமிழகத்தில் மதமாச்சர்யங்களை உருவாக்கி, கல்வி நிலையங்களையும் காவி நிலையங்களாக மாற்ற துடிக்கும் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்.சின் சதி திட்டத்திற்கு எடப்பாடி அரசு ஒரு போதும் துணை போய் விடக்கூடாது.

நீட் தேர்வை கொண்டு வந்து ஏழை மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமாய் இருந்த மத்திய பா.ஜ.க.வின் அங்கத்தின ராகிய எச்.ராஜாவை மாணவர் சமுதாயம் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

சாரண- சாரணியர் அமைப்புக்கு எச்.ராஜாவை தலைவராக்க முயற்சிக்கும் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.