செய்திகள்

உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் மக்கள் நீதி மய்யத்திற்கு உடன்பாடு இல்லை- நடிகை ஸ்ரீபிரியா

காலையில் சாப்பாடு, மாலையில் ஜூஸ் குடித்து முடிக்கும் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் மக்கள் நீதி மய்யத்திற்கு உடன்பாடு இல்லை என்று திருச்சியில் நடிகை ஸ்ரீபிரியா கூறினார். #MakkalNeedhiMaiam

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கிழக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் திருச்சியில் நடந்தது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக உயர் நிலைக்குழு உறுப்பினர்கள் நடிகை ஸ்ரீபிரியா, சவுரிராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பின்னர் ஸ்ரீபிரியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக கட்சி நிர்வாகிகளை நியமனம் செய்து விட்டு, அரசியல் கட்சி தொடங்கி பணியாற்றுவதற்கு பதிலாக அரசியல் கட்சியை அறிவித்து விட்டு சிறப்பாக பணிபுரியும் நபர்களை கண்டறிந்து மாவட்ட நிர்வாகிகளாக நியமனம் செய்ய உள்ளோம்.

மக்கள் நீதி மய்யத்தில் படித்தவர்களுக்கும், அனுபவசாலிகளுக்கும் எப்போதும் இடம் உண்டு. மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனின் அனைத்து நடவடிக்கைகளும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மாதிரி கிராம சபை கூட்டங்கள் சுயநலன் சார்ந்து நடந்து வந்ததை மாற்றி மக்கள் நலன் சார்ந்து நடத்தும் வகையில் நாங்கள் மக்களை தட்டி எழுப்பியுள்ளோம்.

பெண்கள் மற்றும் மாணவர்கள் அதிக அளவில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து வருகிறார்கள். குறிப்பாக 18 முதல் 35 வயதுடையவர்கள் அதிகம் இணைகிறார்கள். மேலும் வயதான முதியோர்களிடம் எங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. மக்கள் நலன் மட்டுமே மக்கள் நீதி மய்யத்தின் கொள்கையாகும்.


காவிரி பிரச்சனை, ஸ்டெர்லைட், நீட் தேர்வு என தமிழகத்தின் நலனுக்கு எதிராகவும், தமிழக மக்களுக்கு எதிராகவும் உள்ள மத்திய, மாநில அரசின் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து குரல் எழுப்பி வருகிறோம்.

மக்ககளை பாதிக்கும் வகையிலான போராட்டங்களை நடத்துவதிலோ, காலை உணவு சாப்பிட்டு விட்டு வந்து, மாலையில் ஜூஸ் குடித்து போராட்டங்களை முடிக்கும் உண்ணாவிரதத்திலோ எங்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை. மூன்று வேளை உணவு உண்ணாமல் 30 சதவீத மக்கள் துயரப்படும் நிலையில் அவர்களது முன்னேற்றத்துக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். உரியதை உரிய இடத்தில் கொண்டு சென்று வலியுறுத்தி பெறவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

அதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே சுமூக உறவு இருக்கவேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தி வரும் பணம் மூலம் கட்சி நடத்துவதில் தவறில்லை. உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் கட்சி நடத்துகிறோம், யாரிடமும் திருடவில்லை. சினிமாவில் அரசியல் செய்யமாட்டோம், அரசியலில் நடிக்கமாட்டோம் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்டுவதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் உயிருடன் வாழும் தமிழக மக்கள் மீதும் அக்கறை செலுத்த வேண்டும். நீட் தேர்வு குளறுபடிகளால் இந்த ஆண்டு 3 உயிர்களை பறி கொடுத்துள்ளோம். இதற்கு முடிவு கட்டவேண்டும்.