அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்து, தன்னை அமைப்பு செயலாளராக நியமித்ததற்கு நடிகர் செந்தில் வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து வெளியே வந்த செந்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு கூட்டமும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒரு கூட்டமும் என சகுனிகள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த கட்சியை ‘கோமா’ நிலைக்கு கொண்டுவந்துவிட்டார்கள். எப்படி இருந்த கட்சி, இந்த நிலைக்கு வந்துவிட்டது. அதற்கு ஒரு நல்ல டாக்டரை பார்க்கவேண்டும். அனைவரும் ஒன்றாக சேரணும் என்பது எல்லோருடைய ஆசை. கட்சியை காப்பாற்றும் டாக்டர் என்றால், அது டி.டி.வி.தினகரன் தான்.
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை சின்னாபின்னமாக்கிவிட்டார்கள். இது அனைவருக்கும் தெரியும். இந்த இயக்கம் 100 ஆண்டுகள் இருக்கும் என்று ஜெயலலிதா கூறியிருந்தார். அவர் கூறியது போல் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் இருக்கும். பதவியும், பணமும் தான் தர்ம யுத்தமா?