சென்னை:
ஆறு மாதங்களாக நீடித்து வந்த இழுபறிக்கு முடிவு கட்டும் வகையில் அதிமுகவின் பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இணைந்தன.
தங்களது கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்பட்டதால் முழு மகிழ்ச்சியுடன் இணைந்துள்ளதாக பன்னீர் செல்வம் அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும், சசிகலா தரப்பினரை கட்சியில் இருந்து முழுவதுமாக வெளியேற்ற வேண்டும் என்பதே முக்கியமான இரண்டு கோரிக்கைகள் ஆகும்.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். பொதுக் குழுவை கூட்டி சசிகலா நீக்கப்படுவார் என்று அவர் கூறினார்.