புதுடெல்லி:
ஆப்கானிஸ்தான் நாட்டில் பாக்லான் மாகாணத்தின் தலைநகர் புல் இ கோம்ரே அருகேயுள்ள பாக் இ ஷமால் என்ற கிராமத்தில் துணை மின் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இதன் மின்உற்பத்தி பணியை ‘கே.இ.சி.’ என்று அழைக்கப்படுகிற இந்திய உள்கட்டமைப்பு நிறுவனம் கவனித்து வருகிறது. இந்த நிறுவனத்தில் இந்திய என்ஜினீயர்கள் 7 பேர் வேலை பார்த்து வந்தனர்.
அவர்கள் நேற்று காலை வழக்கம்போல, ஒரு மினி பஸ்சில் வேலைக்கு புறப்பட்டு சென்றனர். அந்த மினி பஸ்சை ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு டிரைவர் ஓட்டிச்சென்றார்.
அப்போது அவர்கள் அத்தனைபேரையும் துப்பாக்கி ஏந்திய அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து கடத்திச்சென்று விட்டனர். அவர்கள் கடத்தி செல்லப்பட்டு இருப்பதை மாகாண போலீஸ் செய்தி தொடர்பாளர் ஜபிபுல்லா சுஜா கூறியதை மேற்கோள் காட்டி, காபூலில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் உறுதி செய்தனர்.
இந்த கடத்தல் சம்பவத்துக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இருப்பினும், அவர்களை தலீபான் பயங்கரவாதிகள்தான் கடத்தி சென்று விட்டனர், அவர்களை புல் இ கோம்ரே நகரின் தாண்ட் சகாபுதீன் பகுதிக்கு கொண்டு சென்று வைத்து உள்ளனர் என அந்த மாகாண கவர்னர் அப்துல்ஹாய் நேமதி கூறி உள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “உள்ளூர் மக்கள் மூலம் தலீபான்களுடன் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் பேசினர். கடத்தப்பட்டவர்களை அரசு ஊழியர்கள் என தவறுதலாக கருதி கடத்தி சென்று விட்டதாக தலீபான்கள் கூறி உள்ளனர். பழங்குடி இன தலைவர்களை கொண்டு தலீபான்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களை பத்திரமாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.
முன்னதாக இதுபற்றி டெல்லியில் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ஆப்கானிஸ்தானில் பாக்லான் மாகாணத்தில் இந்தியர்கள் கடத்தப்பட்டது பற்றி நாங்கள் அறிந்து இருக்கிறோம். இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகளை தொடர்பு கொண்டு வருகிறோம். கூடுதல் விவரங்களுக்காக காத்து இருக்கிறோம்” என குறிப்பிட்டார்.
காபூலில் உள்ள இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆப்கானிஸ்தான் முழுவதும் ஏராளமான உள்கட்டமைப்பு திட்டப்பணிகளில் 150-க்கும் மேற்பட்ட இந்திய என்ஜினீயர்களும், தொழில்நுட்ப வல்லுனர்களும் வேலை பார்த்து வருகின்றனர். இப்போது கடத்தப்பட்டு உள்ள இந்திய என்ஜினீயர்கள் பத்திரமாக மீட்கப்படுவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து வருகிறோம்” என குறிப்பிட்டார். #SevenIndianskidnapped