கவுண்டம்பாளையம்:
கோவை நரசிம்ம நாயக்கன் பாளையம் அருகே உள்ள புதுப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலான மாணவர்கள் அப்பகுதியில் உள்ள அருந்ததியர் காலனியை சேர்ந்தவர்கள்.
இப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக குமரேஷ்வரி பணியாற்றி வருகிறார். இவர் 5-ம் வகுப்பு படிக்கும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மாணவர்களை அடிக்கடி கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்துவதாகவும், அவ்வப்போது மாணவர்களை தரக்குறைவாக பேசி அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இந்த நிலையில் தலைமை ஆசிரியை குமரேஷ்வரி நேற்று முன்தினம் மீண்டும் சில மாணவர்களை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.
இதனையடுத்து அங்கு சென்ற பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த பெற்றோர்-ஆசிரியர் கழக முன்னாள் நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இப்பிரச்சினை குறித்து ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க முன்னாள் நிர்வாகிகள் கூட்டம் ஊர் கவுண்டர் தலைமையில் நடைபெற்றது.
இதில் முன்னாள் கவுன்சிலர்கள் ராமசாமி, அய்யாசாமி, மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்து பெரிய நாயக்கன் பாளையம் வட்டார கல்வி அலுவலர்ஜெ.பி. கிருஷ்ணமூர்த்தி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியை குமரேஷ்வரியிடம் விசாரணை நடத்தினார். அவரிடம் பொதுமக்கள் தலைமை ஆசிரியையை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும். இல்லை என்றால் நரசிம்ம நாயக்கன் பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
அவர்களை சமாதானப்படுத்திய வட்டார கல்வி அலுவலர், இது தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறும்போது, தலைமை ஆசிரியை குமரேஷ்வரி இதற்கு முன்பு பணியாற்றிய பல்வேறு பள்ளிகளில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ளார்.
பலமுறை இவர் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுத்தும் தனது போக்கை மாற்றி கொள்ளவில்லை. இந்த விவகாரம் குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்ப உள்ளோம் என்றனர்.
இந்த நிலையில் தலைமை ஆசிரியை குமரேஷ்வரியை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய கல்வி அலுவலர் கிருஷ்ணகுமார் பரிந்துரை செய்துள்ளார். இதற்கான உத்தரவு இன்று வெளியாகும் என தெரிகிறது.