செய்திகள்

கிரிமினல் அவதூறு வழக்கில் ஜெய்ராம் ரமேசுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி கோர்ட்

அஜித் தோவலின் மகன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேசுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. #JairamRamesh #AjitDoval #VivekDoval

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் விவேக் தோவல், கேமன் தீவுகளில் நிறுவனம் நடத்தி வருவதாகவும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் முதலீடுகளில் சந்தேகம் இருப்பதாகவும், ‘தி கேரவன்’ இதழில் கடந்த ஜனவரி மாதம் கட்டுரை வெளியானது. இதனை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

தன் மீதான குற்றச்சாட்டுகளை விவேக் தோவல் மறுத்தார். அத்துடன், கட்டுரை எழுதிய கவுசல் ரோப், கட்டுரை வெளியிட்ட கேரவன் ஆசிரியர் பரேஷ் நாத், கட்டுரையை சுட்டிக்காட்டி செய்தியாளர் சந்திப்பு நடத்திய ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருக்கு எதிராக டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் வளாகத்தில் உள்ள பெருநகர நீதிமன்றத்தில், விவேக் தோவல் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெய்ராம் ரமேஷ், நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது ஜாமீன் மனுவை பரிசீலித்த நீதிபதி சமர் விஷால், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 20 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகை செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ளும்படி தெரிவித்தார்.