செய்திகள்

மா.கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அச்சுதானந்தன் 94-வது பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து

கேரள மாநில முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் இன்று 94-வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார்.

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டம், புன்னப்ரா பகுதியில் 20-10-1923 அன்று பிறந்த வெலிக்காகத்து சங்கரன் அச்சுதானந்தன், ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டராக தனது அரசியல் பாதையை தொடங்கினார்.

பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன தலைவர்களில் ஒருவரானார். அம்மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பலமாக வேரூன்ற அரும்பணியாற்றிய அச்சுதானந்தன், 1985 முதல் 2009 வரை அக்கட்சியின் உயர்நிலை குழு உறுப்பினராக இருந்தார்.

2006 முதல் 2011 வரை கேரள மாநில முதல் மந்திரியாகவும், 2011 முதல் 2016 வரை அம்மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் பொறுப்பு வகித்த இவர், ஆளும்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் பல்வேறு துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

ஊழல் வழக்கில் முன்னாள் மந்திரி பாலகிருஷ்ணன் பிள்ளையை குற்றவாளியாக இணைத்தது, மூணாறு பகுதியில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டது, திருட்டு வி.சி.டி.யை ஒழிக்கும் நடவடிக்கை, கள்ள லாட்டரிக்கு எதிரான நடவடிக்கை, கணினிகளுக்கான இலவச மென்பொருள் மற்றும் கல்வித்துறைக்கான இலவச மென்பொருள் திட்டம் போன்றவற்றுக்கு இவர் முன்னோடியாக இருந்துள்ளார்.

மிக எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றிவரும் அச்சுதானந்தன் அதிகாலை 4 மணிக்கு எழுந்துவிடும் வழக்கம் கொண்டவர். ஒரு குவளை இளநீர் மட்டும் அருந்திவிட்டு, அரை மணிநேர நடைபயிற்சி, யோகாசனம், சூரிய வழிபாடு ஆகியவற்றை மேற்கொள்கிறார்.

பகல் ஒரு மணியளவில் காய்கறிகளுடன் எளிமையான உணவு. பின்னர், சற்றுநேர உறக்கம். மாலையில் மீண்டும் நடைபயிற்சி, இரவு உணவாக மூன்று துண்டு பப்பாளிப்பழம் மற்றும் இரண்டு வாழைப்பழங்களை மட்டும் உட்கொள்ளும் அச்சுதானந்தன் சரியாக இரவு 9 மணிக்கு படுக்கைக்கு செல்லும் வழக்கத்தை பின்பற்றி வருகிறார்.