செய்திகள்

லஞ்சம் பெற்றதாக கைதான தலைமை கணக்காயர் அருண் கோயலுக்கு நிபந்தனை ஜாமின்

லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ. அதிகாரிகளால் கைதான தமிழக அரசின் தலைமை கணக்காயர் அருண் கோயலுக்கு சென்னை ஐகோர்ட் இன்று ஜாமின் வழங்கியுள்ளது.

சென்னை:

தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் கணக்காளர் பணி நியமனத்திற்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக பொது கணக்காயர் அருண் கோயலை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இவருக்கு உடந்தையாக இருந்த மூத்த கணக்கு அதிகாரி கஜேந்திரன், பொதுப்பணித் துறையின் விழுப்புரம் டிவிஷனில் கணக்காளராக பணி நியமனம் பெற விரும்பி லஞ்சம் கொடுத்த சிவலிங்கம், அதற்கு உதவியாக இருந்த திருவள்ளூர் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் எல்.எஸ்.ராஜா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இதனை அடுத்து, அவர்கள் அனைவரும் சி.பி.ஐ காவலில் அடைக்கப்பட்டனர். ஜாமின் கோரி அருண் கோயல் உள்ளிட்ட நால்வர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை சி.பி.ஐ கோர்ட் நிராகரித்தது உடன், அவர்களது காவலையும் நீட்டித்தது.

இந்நிலையில், அருண் கோயல் உள்ளிட்ட நால்வரும் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களது மனுவை இன்று விசாரித்த ஐகோர்ட், நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. #TamilNews