மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேரம்பாளையம் மொள்ளே பாளையத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் அருண்குமார் (வயது 23). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
நேற்று இரவு வழக்கம்போல் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பாளையம்- அன்னூர் ரோட்டில் சென்றார். ஜடையாம்பாளையம் பிரிவு அருகே வந்தபோது எதிரே அரசு பஸ் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண்குமார் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, ஏட்டு லோகநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். பலியான அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.