தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள மாதேமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் விஜி (வயது 22). கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தர்மபுரி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு விஜி வேலையை முடித்துவிட்டு அவரது இருசக்கர வாகனத்தில் தருமபுரியில் இருந்து மாதேமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஏமகுட்டியூர் அருகே சென்று கொண்டு இருந்தபோது எதிரே வந்து கொண்டிருந்த தனியார் பள்ளி வாகனத்தின் அவசரவழி கதவு தானாக திறந்து விஜி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் ஏற்பட்ட விஜியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே விஜி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.