சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் இருந்து அதன் புறநகர் பகுதிகளுக்கு சாதாரண மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த தடங்களில் இனிமேல் ஏ.சி. ரெயில்களையும் இயக்க மத்திய ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த ஏ.சி. வசதி கொண்ட மின்சார ரெயில்கள் முதலில் மும்பையில் அறிமுகம் செய்யப்படுகிறது.
அதன்படி, குளிர்சாதன வசதி மற்றும் தானியங்கி கதவுகள் கொண்ட 12 பெட்டிகளுடன் மும்பையின் சர்ச்கேட்-பொரிவ்லி இடையே இந்த ரெயில்கள் முதன்முதலாக இயக்கப்படுகிறது. இதற்கான அனைத்து தயார் நடவடிக்கைகளும் முடிவடையும்பட்சத்தில், இந்த ரெயில் சேவை நாளை (திங்கட்கிழமை) அல்லது ஜனவரி 1-ந்தேதி முதல் தொடங்கும் என மத்திய ரெயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.
இதைத்தொடர்ந்து சென்னை, கொல்கத்தா, செகந்திராபாத் போன்ற நகரங்களுக்கும் இந்த ‘ஏ.சி’. வசதி கொண்ட புறநகர் ரெயில்களை விரைவில் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து ரெயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘புறநகர் ரெயில் இயக்கத்தில் ஏராளமான மாற்றங்களை செய்ய திட்டமிட்டு வருகிறோம். 2019-2020 முதல் அனைத்து மின்சார ரெயில்களும் குளிர்சாதன வசதி மற்றும் தானியங்கி கதவுகளுடனேயே தயாரிக்கப்படும். சென்னை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் செகந்திராபாத் போன்ற நகரங்களுக்கும் இந்த ரெயில்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளோம்’ என்றார்.
இந்த ‘ஏ.சி’. ரெயில்கள் இயக்கப்பட்டாலும், பழைய ரெயில்களும் வழக்கம் போல இயக்கப்படும் என்று கூறிய அவர், ஆனால் இரண்டுக்குமான டிக்கெட் விலையில் மாற்றம் இருக்கும் என்றும் தெரிவித்தார்.