ஆவின் பால் 
செய்திகள்

ஆவின் பால் பாக்கெட் கசிந்தால் மாற்றிக்கொள்ளும் வசதி

ஆவின் பால் பாக்கெட்டுகள் கசிவு உடையதாக இருந்தால் வாடிக்கையாளர் உடனே ஆவின் வட்டார அலுவலகங்கள், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க அலுவலகங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.

சென்னை:

நுகர்வோருக்கான சேவையில் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ள ஆவின், அவர்களுடைய நலன் கருதி இன்னுமொரு வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது.

ஆவின் பண்ணைகளில் சிறந்த முறையில் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டாலும் அவற்றினை போக்குவரத்து வாகனங்களில் ஏற்றி வினியோக மையங்களுக்கு கொண்டு வந்து இறக்கி கையாளுகையில் தவிர்க்க இயலாத காரணங்களினால் பால் பாக்கெட்டுகளில் சில சமயம் கசிவு ஏற்பட்டு புகார்கள் பெறப்படுகின்றன.

எனவே இதற்கு தீர்வு காணும் பொருட்டு கசியும் பால் பாக்கெட்டுகளை வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்பப்பெற்று மாற்று பால் பாக்கெட்டுகளை அவர்களுக்கு வழங்குவதற்கு தற்போது வசதி செய்து தரப்பட்டுள்ளது.

ஆவின் பால் பாக்கெட்டுகள் கசிவு உடையதாக இருந்தால் (சிந்தியது போக மீதமுள்ள பாலோடு) அதனை வாடிக்கையாளர் உடனே அருகில் உள்ள ஆவின் வட்டார அலுவலகங்கள், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க அலுவலகங்கள் மற்றும் ஆவின் நடத்து ஹைடெக் பாலகங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். கசியும் பால் பாக்கெட்டுகள் வாங்கப்பட்ட தினத்திலேயே மாற்றப்பட வேண்டும்.