செய்திகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டை முற்றுகையிட முயற்சி- 75 பேர் கைது

சேலத்தில் ஆதி தமிழர் பேரவை சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டை முற்றுகையிட முயன்ற 75 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்:

சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போக செய்யும் வகையில் உள்ளதாகவும், அதனை திரும்ப பெற கோரியும் வட மாநிலங்களில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் எஸ்.சி, எஸ்.டி. அமைப்பினர் கடந்த வாரம் தொடர் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் நடத்தப்பட்ட பல இடங்களில் வன்முறை ஏற்பட்டதால் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்த நிலையில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு எதிராக உள்ள அந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி சேலம் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டை முற்றுகையிட போவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இதனால் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் உத்தரவின் பேரில் இன்று காலை முதலே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டை சுற்றி 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் அவரது வீடு இருக்கும் பகுதியில் போலீசார் யாரையும் அனுமதிக்கவில்லை.

சேலம் திருவாக்கவுண்டனூர் பை-பாஸ் ரோட்டில் மேம்பாலம் அருகே உள்ள ஒரு டீ கடை முன்பு முதல்- அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவதற்காக திரண்டிருந்த ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் தலைமையில் வந்த தொண்டர்களையும் போலீசார் கைது செய்தனர். மொத்தம் 75-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தால் அங்கு சிறுது நேரம் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

SCROLL FOR NEXT