செய்திகள்

டெல்லி: காற்று மாசடைதலை கட்டுப்படுத்த ஆம் ஆத்மி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - பா.ஜ.க. குற்றச்சாட்டு

டெல்லியில் அதிகரித்துவரும் காற்று மாசுவை கட்டுப்படுத்த ஆளும் ஆம் ஆத்மி அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

டெல்லியில் அதிகரித்துவரும் காற்று மாசுவை கட்டுப்படுத்த ஆளும் ஆம் ஆத்மி அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லியில் வாகனங்கள் பெருக்கம், தொழிற்சாலைகள், கட்டுமான பணிகள் உள்ளிட்ட காரணங்களால் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதனால் டெல்லியில் எங்கு பார்த்தாலும் புகை மூட்டமாக காணப்படுகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். போதிய வெளிச்சம் இல்லாததால் ரயில், விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளன.

மாசுபாடால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாச கோளாறுகளால் மக்கள் பாதிக்கப்படும் நிலையுள்ளது. மாசுபாட்டை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தன்னார்வலர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, முககவசம் வழங்குவது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வாகன புகையை கட்டுப்படுத்தும் விதமாக, ஒற்றை இலக்க வாகனங்கள் ஒருநாளும், இரட்டை இலக்க வாகனங்கள் மறுநாளும் இயக்கும் நடைமுறையை டெல்லி அரசு ஏற்கனவே அமல்படுத்தியது. இந்த திட்டத்தில் பெண்கள் மற்றும் சில முக்கிய தலைவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து அந்த திட்டம் தொடர்ந்து கடைபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், மாசுபாடை கட்டுப்படுத்த ஆளும் ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா பேசுகையில், “சுற்றுச்சூழலை பாதுகாக்க பசுமை தீர்ப்பாயம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும், அவைகளை டெல்லி அரசு கண்டுகொள்ளவில்லை. வாகன கட்டுப்பாடு திட்டத்தையும் முறையாக கடைபிடிக்கவில்லை. டெல்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சரிவர செயல்படவில்லை. இதுபோன்ற காரணங்களால்தான் டெல்லியில் இந்தளவுக்கு மாசு அதிகரித்துள்ளது”, என பேசினார்.