செய்திகள்

ஆம்ஆத்மி கட்சிக்கு வந்த பணம் குறித்து விசாரணை: மத்திய உள்துறை விளக்கம் கேட்கிறது

வெளிநாடுகளில் இருந்து ஆம்ஆத்மி கட்சிக்கு வந்த பணம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது.

மாலை மலர்

புதுடெல்லி:

ஆம் ஆத்மி கட்சியை தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் முதன் முதலாக டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார்.

டெல்லியில் அடுத்தடுத்து நடந்த 2 சட்டசபை தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டது. மேலும் பாராளுமன்ற தேர்தலிலும் பல மாநிலங்களில் இந்த கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது.

தேர்தல் செலவுகளுக்காக ஆம் ஆத்மி கட்சி பல்வேறு வகையில் நிதி திரட்டியது. அந்த கட்சிக்கு வெளிநாட்டில் இருந்து ஏராளமாக பணம் வந்தன.

ஆனால், வெளிநாட்டு பணம் வந்ததில் சில முறைகேடுகள் நடந்து இருப்பதாக மத்திய உள்துறை சந்தேகிக்கிறது.

வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை முறைப்படுத்த அன்னிய செலாவணி ஒழுங்குமுறை சட்டம் உள்ளது.

இந்த சட்டத்தை மீறி ஆம் ஆத்மிக்கு பணம் வந்திருப்பதாக கருதப்படுகிறது. எனவே, வெளி நாட்டு பணம் வந்தது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது.

இது சம்பந்தமாக ஆம் ஆத்மி சார்பில் உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, இது வழக்கமாக நடக்கும் விசாரணைதான். வேறு முக்கியத்துவம் எதுவும் இதில் இல்லை என்று கூறினார்கள்.