அயோத்தியாபட்டணம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அருநூற்றுமலை, பெரியகுட்டிமடுவு, சந்துமலை பகுதிகளில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடைகள் சேர்ந்து புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதி உற்பத்தியாகிறது. இந்த நதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் புழுதிக்குட்டையில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.
ஆனைமடுவு அணை மூலம் நீர்முள்ளிக்குட்டை, சின்னமநாயக்கன்பாளையம், குறிச்சி, கோலாத்துக்கோம்பை, சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கொட்டவாடி, அத்தனூர்பட்டி, பேளூர், குறிச்சி ஏரிகளும், 20-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும் பாசன வசதியும் பெறுகின்றன.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக எதிர்பார்த்த அளவிற்கு வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. கடந்த ஆண்டு இறுதியில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்து, அணையில் 93.5 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது. இந்தநிலையில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனதால், அணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை பாசனத்திற்கு திறந்து விட வேண்டுமென, கடந்த ஜனவரி மாதம் வாழப்பாடியில் நடைபெற்ற பாசன விவசாயிகள், அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் 9 நாட்களுக்கு தினசரி வினாடிக்கு 60 கன அடி வீதம் தண்ணீரை ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகளுக்காக வசிஷ்ட நதியில் திறக்கப்பட்டது. இதனால், 45 அடியாக இருந்த அணை நீர்மட்டம் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் 16.75 அடியாக குறைந்தது.
இந்தநிலையில், கடந்த ஆகஸ்டு, செப்டம்பர், மாதங்களில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக 12 அடி வரை உயர்ந்து, செப்டம்பர் 15-ந் தேதி 28.21 அடியாக உயர்ந்தது.
கடந்த மாதத்தில் அவ்வப்போது பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று அணை நீர்மட்டம் 47.57 அடியாக இருந்தது. வடகிழக்கு பருவமழை போதிய அளவிற்கு பெய்தால், இந்த ஆண்டு அணை முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
இதுகுறித்து ஆனைமடுவு அணை ஆயக்கட்டு வாய்க்கால் பாசன விவசாயிகள் சிலர் கூறியதாவது:-
விவசாயிகளுக்கு வசிஷ்ட நதியும், ஆனைமடுவு ஆணையும் தான் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் படிப்படியாக பருவமழை குறைந்து வருவதால், ஆண்டு தோறும் அணை நிரம்புவதில்லை. வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதில்லை. இதனால் ஆயக்கட்டு வாய்க்கால் பாசன விவசாயிகள், நேரடி ஆற்றுப் பாசன விவசாயிகள், ஏரி பாசன விவசாயிகள், ஆற்றுப்படுகை கிராம விவசாயிகளுக்கும் பாசனத்திற்கு போதிய தண்ணீரின்றி, பயிர் செய்ய வழியின்றி தவித்து வருகிறோம்.இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்து அணை முழு கொள்ளளவை எட்டும் என நம்புகிறோம், என்றனர்.