செய்திகள்

ஆடி வெள்ளிக்கிழமையான இன்று சமயபுரம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

ஆடி வெள்ளிக்கிழமையான இன்று திருச்சி சமயபுரம் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

மாலை மலர்

மண்ணச்சநல்லூர்:

ஆடி மாதத்தில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழி பாடுகள் நடத்தப்படும். தற்போது ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக  ஆடி வெள்ளிக்கிழமையன்று ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

அதன்படி ஆடி வெள்ளிக்கிழமையான இன்று  திருச்சி சமயபுரம் மாரியம்மன்  கோவிலுக்கு  இன்று  காலையில்  இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய குவிந்தனர். பக்தர்கள் பலர் பல்வேறு ஊர்களிலிருந்து பால்குடம் எடுத்து கொண்டு பாத யாத்திரையாகவும் கோவிலுக்கு  வந்தனர். இன்னும் சில பக்தர்கள் அலகுகுத்தி , காவடி எடுத்தும் வந்து அம்மனை வணங்கி வழிபட்டனர்.  

மேலும்  கோவில் பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தும் வேண்டுதலை நிறைவேற்றினர். நீண்ட வரிசையில் நின்றும் அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. மேலும் ஆடிபெருக்கையொட்டி காவிரி ஆற்றில் புனிதநீராட  பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்சிக்கு வந்தனர். அவர்களும் சமயபுரம் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று சமயபுரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.