பேரூர் படித்துறையில் தாலி மாற்றிய பெண்கள். 
செய்திகள்

ஆடிப்பெருக்கையொட்டி பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இன்று ஆடிப்பெருக்கை யொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் ஆயிரக் கணக்கில் திரண்டு தரிசனம் செய்தனர்.

மாலை மலர்

ஆடிப்பெருக்கு விழா கோவை மாவட்டத்தில் பேரூர் நொய்யல் ஆறு, மேட்டுப்பாளையம் பவானி ஆறு பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் களைகட்டும்.

ஆனால் இந்த ஆண்டில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு விமரிசையாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இன்று ஆடிப்பெருக்கை யொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் ஆயிரக் கணக்கில் திரண்டு தரிசனம் செய்தனர். நொய்யல் ஆற்றில் தண்ணீர் இல்லாததால் அங்கு அமைக்கப்பட்டிருந்த குழாயில் வந்த தண்ணீரில் குளித்தனர்.

மேலும் சில பக்தர்கள் அந்த தண்ணீரை தலையில் மட்டும் தெளித்தப்படி சென்றனர். ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு விழா இந்த ஆண்டு களையிழந்து காணப்பட்டது. பின்னர் ஆற்றின் படித்துறையில் ஏராளமான சுமங்கலி பெண்கள், புதுதாலி கயிறு மாற்றி கொண்டனர்.

இதேபோல் ஏராளமான ஆண்களும், பெண்களும் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். ஆடிப்பெருக்கையொட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவில் சுவாமி- பச்சை நாயகி அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை முதலே நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.