செய்திகள்

தொண்டி அருகே ஆடித் திருவிழாவில் பக்தர்கள் பறவைக் காவடி

ஆடித் திருவிழாவில் பக்தர்கள் பறவை காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மாலை மலர்

தொண்டி:

தொண்டி அருகே நம்பு தாளை முத்துமாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா விமரிசையாக நடை பெற்றது.

திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் அனைவரும் கடந்த 10 நாட்களாக விரதம் இருந்தனர். நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்தனர்.

அதனைத்தொடர்ந்து தினமும் கிராமத்தில் உள்ள பெண்கள் மற்றும் இளைஞர்கள் மாரியம்மன் புகழ் பாடும், முளைக்கொட்டு கும்மிப்பாட்டு பாடி, ஆடினர்.

தொடர்ந்து பக்தர்கள் நம்புஈஸ்வரர் கோவிலிலிருந்து அலகு குத்தி, பால்குடம் எடுத்துவந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை தீச்சட்டி ஏந்தி வந்து கோவில் முன்பாக வளர்க்கப்பட்டிருந்த தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறுவர், சிறுமியர் பூத்தட்டு ஏந்தி வந்து அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர்.

செல்வ முத்து மாரியம்மன் கோவிலிலும் ஆடித் திருவிழா நடைபெற்றது. இதில் நேர்த்திக்கடன் வைத்திருந்த மீனவர்கள் பலர் தொண்டி சிவன் கோவிலிலிருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பறவைக் காவடி, அக்னிக்காவடி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.