செய்திகள்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 1-ந் தேதி முதல் ஆதார் எண் கட்டாயம்

வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், பான் அட்டை கோரி விண்ணப்பிப்பதற்கும் ஜூலை 1- ந் தேதியில் இருந்து ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி:

வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், பான் அட்டை கோரி விண்ணப்பிப்பதற்கும் ஜூலை 1- ந் தேதியில் இருந்து ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பான் அட்டைகள் கோரி விண்ணப்பிப்பதற்கு ஆதார் எண் கட்டாயம் என்ற வருமானவரி சட்டத்தின் ‌ஷரத்து சட்டரீதியாக செல்லுபடியாகும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. எனினும் ஆதார் இல்லாதவர்களும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இந்த தீர்ப்பின் 3 அம்ச விளைவுகள் தொடர்பாக மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியம் (சி.பி.டி.டி) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் கூறப்பட்டள்ளதாவது:-

ஜூலை 1- ந்தேதியில் இருந்து ஒவ்வொருவரும் தங்களது வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கும், பான்அட்டை கோரி விண்ணப்பிப்பதற்கும் ஆதார் எண்ணை குறிப்பிடுவது அல்லது ஆதார் திட்டத்தில் பதிவு செய்ததற்கான எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாகும்.

இந்த ஆண்டு ஜூலை 1- ந் தேதி நிலவரப்படி பான் எண் ஒதுக்கீட்டை பெற்றவர்கள் தங்களது ஆதார் எண்ணையோ அல்லது ஆதார் பதிவுக்கான எண்ணையோ வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்காக இதை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

ஆதார் எண் இல்லாதவர்களுக்கும், ஆதார் அட்டை பெற விரும்பாதவர்களுக்கும் பான் அட்டை ரத்து செய்யப்படாது என்ற தற்காலிக நிவாரணத்தை மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ளது.

இது வருமானவரி சட்டத்தின் படி பான் எண்ணை குறிப்பிட தவறியதற்காக எந்த விளைவும் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த சலுகையை கோர்ட்டு அளித்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் விளக்கம் அளிக்கையில் ‘பான்’ எனப்படும் நிரந்தர கணக்கு எண் ரத்து செய்யப்பட்டால் ஒரு நபரால் வழக்கமான வங்கி மற்றும் நிதி செயல்பாடுகளை மேற்கொள்ள இயலாமல் போய்விடும். எனவே மேற்கண்ட நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஜூலை 1- ந்தேதி முதல் வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கும், பான் அட்டை கோரி விண்ணப்பிப்பதற்கும் ஆதார் கட்டாயமாகும் என்றார்.

SCROLL FOR NEXT