ஆதார் அட்டை வழங்கும் ஏஜென்சிகள் போலியான காரணங்களை கூறி மக்களை சேர்க்க மறுத்தால் முதல் தவறுக்கு ரூ.10 ஆயிரமும், மீண்டும் தொடர்ந்தால் ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என்று ‘உதய்’ நிறுவனம் அறிவித்துள்ளது.
அரசின் பல சேவைகளுக்கும், வங்கி கணக்கு, செல்போன் சேவை, வருமான வரி போன்ற பலவற்றுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டைக்காக குறிப்பிட்ட மையங்களில் புகைப்படம் எடுக்கவோ, பெயர் சேர்க்கவோ மக்கள் செல்லும்போது சில இடங்களில் தொழில்நுட்ப கோளாறு என்றோ, போலியான காரணங்களை கூறியோ அவர்களை சேர்க்க மறுப்பதாக புகார்கள் வந்தன.
இதுதொடர்பாக ஆதார் அட்டை வழங்கும் நிறுவனமான இந்திய தனிப்பட்ட அடையாள ஆணைய அமைப்பின் (உதய்) தலைமை செயல் அதிகாரி அஜய்பூஷண் பாண்டே கூறியதாவது:-
இந்தியா முழுவதும் ஆதார் அட்டை வழங்குவதற்கான பெயர் சேர்ப்பு மையங்கள் 25 ஆயிரம் உள்ளன. இதற்கான பணிகள் தனியார் நிறுவனங்களிடம் (ஏஜென்சிகளிடம்) ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆதார் மையங்களில் போலியான காரணங்களை அல்லது ஏதாவது காரணங்களை கூறி மக்களை ஆதாரில் சேர்க்க மறுப்பதாக ஏராளமான புகார்கள் வந்தன.
இதுவரை வெளியிடங்களில் செயல்பட்டுவந்த மையங்கள் அரசு அல்லது உள்ளாட்சி அலுவலகங்களில் இடம் ஒதுக்கப்பட்டு வருகிற வாரங்களில் அங்கு செயல்பட தொடங்கும். இதன்மூலம் அவர்கள் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் செயல்படுவார்கள்.
எந்திரத்தை இயக்கும் ஆபரேட்டர் எங்கள் வலைதளத்தில் சேவைகள் பட்டியலை தெரிவிக்க வேண்டும். அவர் பதிவு செய்ததுமே அவர்களது எந்திரங்கள் வேலை செய்கிறது என்றும், அவர்கள் ஆதாரில் மக்களை சேர்க்க தயாராக இருக்கிறார்கள் என்றும் கருதப்படும். இதனால் ஏஜென்சிகள் போலியான காரணங்களை கூறி மக்களை திருப்பி அனுப்ப முடியாது.
ஆதாரில் சேர்க்க மறுப்பது ஊழல் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். எனவே அனைத்து ஆதார் பெயர் சேர்ப்பு நிறுவனங்களுக்கும், ஆபரேட்டர்களுக்கும் இதுதொடர்பாக எங்கள் கள அதிகாரிகள் மூலம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளோம். சேர்க்க மறுத்தால் புகார் செய்யும்படி பொதுமக்களையும் கேட்டுக்கொண்டுள்ளோம்.
எனவே இதுபோன்ற செயலில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முதல் குற்றமாக விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதே தவறை மீண்டும் செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதன்பின்னரும் தொடர்ந்து ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அந்த நிறுவனங்கள் தடை செய்யப்படும்.
தொலைபேசியில் ஆதார் எண்ணை கேட்பதாகவும் பல புகார்கள் வருகின்றன. வங்கிகளில் இருந்தோ, தொலைபேசி நிறுவனங்களில் இருந்தோ, அரசு அலுவலகத்தில் இருந்தோ கேட்டார்கள் என்பதற்காக எக்காரணம் கொண்டும் தொலைபேசியில் உங்கள் ஆதார் எண்ணையோ, ஒருமுறை கடவுச்சொல்லையோ (ஓ.டி.பி.) தெரிவிக்க வேண்டாம். அதேபோல அதிகாரபூர்வமற்ற வலைதளங்களிலும் பதிவு செய்ய வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்.