செய்திகள்

‘நீட்’ தேர்வில் மாணவியின் உள்ளாடை அகற்றம்: சி.பி.எஸ்.இ. தலைவருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

நீட் தேர்வில் கேரள மாணவியின் உள்ளாடை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையம், சி.பி.எஸ்.இ. தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் கடந்த 7-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் தீவிர சோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்களின் சட்டை அரைக்கை சட்டையாக கிழிக்கப்பட்டது, மாணவிகள் தலையில் அணிந்திருந்த கிளிப்புகள் அகற்றப்பட்டதால் அவர்கள் தலைவிரி கோலமானார்கள், தேர்வு எழுத வந்தவர்களின் காதுக்குள் டார்ச் லைட் அடித்து ‘பிட்’ பேப்பர் மறைத்து வைத்துள்ளனரா? என்று சோதனை செய்யப்பட்டது.

இதில் உச்சக்கட்டமாக கேரள மாநிலம் கண்ணூரில் நீட் தேர்வு எழுதச் சென்ற ஒரு மாணவியின் உள்ளாடையை அகற்ற வேண்டும் என்று தேர்வு கண்காணிப்பாளர்கள் கூறியதால் அந்த மாணவி கண்ணீருடன் உள்ளாடையை அகற்றி பெற்றோரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுதச் சென்ற கொடுமையும் நடந்தது.

மாணவி தேர்வு எழுத சென்றபோது மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தேர்வு அதிகாரிகள் அவரை பரிசோதனை செய்தனர். அப்போது அவரது உள்ளாடையில் இருந்து பீப் சத்தம் கேட்டது. அந்த மாணவி உள்ளாடையில் எதையோ மறைத்து வைத்திருப்பதாக நினைத்த தேர்வு கண்காணிப்பாளர் அவரை மிரட்டினார். அந்த மாணவியின் உள்ளாடையில் உள்ள மெட்டல் பட்டன் காரணமாகவே பீப் சத்தம் கேட்டுள்ளது தெரியவந்ததும் உள்ளாடையை அகற்றி விட்டு தேர்வு எழுத அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்கள் அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் கேரள மாநில மகளிர் ஆணையமும் இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.